திமுக கூட்டணி தொகுதி பங்கீடு: காங்கிரஸ் 28 – மற்ற கட்சிகளுக்கு எத்தனை?

திமுக கூட்டணியில் பங்கீடு விவரம் தற்போது வரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

dmk mk stalin

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தற்போது 21 கட்சிகள் இணைந்துள்ளன. இந்த கூட்டணி 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணிக்கு எதிராக பிரம்மாண்ட சக்தியாக உருவெடுத்துள்ளது.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகள்: திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, அகில இந்திய பார்வர்டு பிளாக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை, திராவிட வெற்றிக் கழகம், புதிய திராவிட கழகம் ஆகியவை.

அதே சமயம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு 4 தொகுதிகள், இ.யூ.மு.லீக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், கொமதேக-வுக்கு 2 தொகுதிகள் என தொடக்க கட்ட ஒதுக்கீடு நடைபெற்றுள்ளது.

கூட்டணியில் புதிய கட்சிகள் அதிகம் இணைந்துள்ளதால் தொகுதி ஒதுக்கீட்டில் சில கட்சிகள் தங்கள் எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பாஜகவையும் அதன் கூட்டணியையும் வீழ்த்துவதே கூட்டணியின் முதன்மை இலக்கு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெளிவுபடுத்தியுள்ளார்.ஒட்டுமொத்தமாக, திமுக தலைமையிலான இந்த பிரம்மாண்ட கூட்டணி தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவை தீவிரமடைந்து வருகின்றன.