தேமுதிக சேராத ஏமாற்றம்..பழனிசாமி விரக்தியில் இருக்கிறார் - திருமாவளவன்

திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்த விரக்தியால், எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசுகிறார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சி தலைவர்களும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பிரச்சாரத்தின் போது திமுக மற்றும் அதனுடைய கூட்டணி வைத்துள்ள கட்சியான தேமுதிகவையும் சேர்த்து விமர்சனம் செய்து பேசி வருகிறார். இது குறித்து விசிக தலைவர் திருமாவளவனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் " அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஒரு விரக்தி ஏற்பட்டிருக்கிறது. முதலில் அவர்களுக்கு கூட்டணி பலமே இல்லை. அதை நியாயப்படுத்தவும் முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

பாஜகவோடு ஏன் கூட்டணி சேர்ந்தோம் என்று அதிமுகவினரால் நியாயப்படுத்த முடியவில்லை. அதேபோல், பாஜகவினராலும் அதிமுகவோடு ஏன் கூட்டணி சேர்ந்தோம் என்பதை நியாயப்படுத்த முடியவில்லை. இது ஒரு பொருந்தா கூட்டணி. கொள்கை அடிப்படையில் முரண்பட்டு நிற்கும் இரு கட்சிகள், வெறும் தேர்தல் ஆதாயத்துக்காக மட்டுமே தவிர்க்க முடியாத கட்டாயத்தின் பேரில் இணைந்திருக்கின்றன.

அந்தக் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் ஒருவருக்கொருவர் கடுமையாக முரண்பட்டவர்கள். அமமுகவாக இருந்தாலும், பாமகவாக இருந்தாலும், மற்ற கட்சிகளாக இருந்தாலும் – அத்தனை பேருக்கும் இடையே தனிப்பட்ட முரண்பாடுகள், கருத்தியல் முரண்பாடுகள், நடைமுறை முரண்பாடுகள் எல்லாம் உள்ளன. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் தேர்தல் ஆதாயத்துக்காக மட்டும் தற்காலிகமாக இணைந்திருக்கிறார்கள். எனவே அவர்களால் தங்களது கூட்டணியைக்கூட நியாயப்படுத்த முடியவில்லை.

இந்த விரக்தியில்தான் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை தனிநபர் தாக்குதலாக மாற்றி, நாகரிக வரம்புகளை மீறிய அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.தேமுதிகவை அதிமுக கூட்டணியில் இணைக்க பெரும் முயற்சி எடுத்தார்கள். ஆனால் அது வெற்றி பெறவில்லை. தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது என்கிற ஏமாற்றமும், அதனால் ஏற்பட்ட ஆத்திரமும்தான் அவர்களை இப்படி பேச வைக்கிறது.

பிரேமலதா விஜயகாந்த் பற்றியும், தேமுதிக பற்றியும் அவர்கள் பேசும் விதம், அவர்களது உள்ளார்ந்த ஏமாற்றத்தையே பிரதிபலிக்கிறது.தமிழ்நாட்டு மக்கள் இதையெல்லாம் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக கூட்டணியினர் எப்படி பேசுகிறார்கள், எப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதையும், எதிர்க்கட்சிகள் எப்படி பேசுகிறார்கள் என்பதையும் மக்கள் நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.ஏப்ரல் 23-ஆம் தேதி, அதற்கான தீர்ப்பை மக்கள் எழுதுவார்கள்" எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக சேராத ஏமாற்றம்..பழனிசாமி விரக்தியில் இருக்கிறார் - திருமாவளவன்