விஜயை எதிர்த்து அ.தி.மு.க நேரடியாக களம் காணவில்லையா? இபிஎஸ் கொடுத்த பதில்!

பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவர் விஜய் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இபிஎஸ் பதில் அளித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) என்.டி.ஏ கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து செய்தியாளர்களிடம் முக்கிய பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவார் என்ற தகவல் வந்திருக்கிறது அவரை எதிர்த்து அ.தி.மு.க நேரடியாக களம் காணவில்லையா என கேள்வி எழுப்பப்பட்டபோது, இபிஎஸ் அதற்கு தெளிவான பதில் அளித்தார்.

இபிஎஸ் கூறியதாவது, “இது என்ன கேள்வி? கூட்டணி அமைந்த பிறகு எல்லாம் சமமாகத்தான் பார்க்க வேண்டும். இவர் பெரியவர், அவர் பெரியவர் என்று இங்கு இடமில்லை. எங்கள் கூட்டணியில் அனைவரும் சமம். ஒவ்வொரு கட்சியும் தனது பலத்துடன் சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போலத்தான்” என்றார்.மேலும் அவர், “எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளையும் ஒரே முகமாகத்தான் பார்க்கிறோம்.

எந்தக் கட்சியும் மற்றொன்றைவிட பெரியது அல்லது சிறியது என்று நாங்கள் பார்ப்பதில்லை. 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதிமுக தலைமையில் அண்ணா தி.மு.க ஆட்சி மீண்டும் அமையும்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ள நிலையில், பாமகவுக்கு 18 தொகுதிகள், பாஜகவுக்கு 27 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்று இபிஎஸ் கூறினார். பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடும் பட்சத்தில், அந்தத் தொகுதியில் பாமக வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் பேட்டியின் மூலம் அதிமுக – பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி முழு ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்ளும் என்ற செய்தி தெளிவாகியுள்ளது. இபிஎஸ்-இன் இந்த உறுதியான பதில், கூட்டணிக்குள் எந்தவித பிளவும் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.