நாமக்கல் :நாமக்கல் நகருக்குள் வந்த விஜய்க்கு, சாலை முழுவதும் கூடிநின்று தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தவெக தலைவர் விஜய் பேச உள்ள இடத்தில் காலை முதலே ஏராளமான தொண்டர்கள் கூடி நிற்கின்றனர்.
6 மணி நேரம் தாமதத்திற்குப் பின், நாமக்கல்லில் பரப்புரையை தொடங்கிய தவெக தலைவர் விஜய் திமுக வாக்குறுதிகளை பட்டியலிட்டு கேள்விகளை எழுப்பினார். இது குறித்து அவர் பேசுகையில், “வாக்குறுதி எண் 50: ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானியக் கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை உலர் கலங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும் சொன்னீங்களே.?
வாக்குறுதி எண் 66: கொப்பரை தேங்காய்களை, அரசே கொள்முதல் செய்து தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்து நியாயவிலைக் கடைகளில் அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் சொன்னீங்களே.? வாக்குறுதி எண் 68: நியாயவிலைக் கடைகளில் நாட்டுச்சக்கரை, வெல்லம் விநியோகிக்க நடவடிக்கைடும்னு சொன்னீங்களே.?
வாக்குறுதி எண் 152: போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் இதையெல்லாம் சொன்னார்களே… செய்தார்களா? குறிப்பாக, இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதில் மிகப்பெரிய பங்குடைய, சென்னை மாகாண முதல்வராக பதவியேற்ற முதல் தமிழர் சுப்புராயன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டிக்கொடுப்பதாக வாக்குறுதி எண் 456-ல் கொடுத்தது யாரு? இதையெல்லாம் சொன்னாங்களே… செஞ்சாங்களா?” என்று அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாமக்கல்லில் முட்டை சேமிப்பு கிடங்கு, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை இதுவரை ஆண்ட கட்சியும் யோசிக்கவில்லை, ஆளும் கட்சியும் யோசிக்கவில்லை. திமுக எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமுடைய கிட்னி திருட்டில் அதிகம் பாதிக்கப்பட்டது நாமக்கல்லை சேர்ந்த விசைத்தறி பெண் தொழிலாளர்கள் என சொல்லப்படுகிறது.
இத்திருட்டுக்கு கந்துவட்டி கொடுமைதான் ஆரம்பப் புள்ளி. அச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்றாலும், தவெக ஆட்சி அமைந்தவுடன் தண்டிக்கப்படுவர். விசைத்தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தேவையான தீர்வுகளை யோசித்து, எங்கள் தேர்தல் அறிக்கையில் செல்வோம்… சாரி சொல்வோம்” என்று கூறினார்.
