தொகுதி மறுசீரமைப்பு, ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை - விஜய்!

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என த.வெ.க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) தொடர்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் ‘அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026’ மூலம் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 ஆக உயர்த்தும் முயற்சியை தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இந்த மசோதா, நாளை தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, இந்தத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறையும் என்பது தவெகவின் கருத்தாக உள்ளது.

விஜய் வெளியிட்ட அறிக்கையில், “ஒன்றிய அரசு, மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுசீரமைப்பை செய்ய முயல்வது, தென் மாநிலங்களுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கை ஆகும். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் ஆண்டாண்டு காலமாக மக்கள் தொகை கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகின்றன. ஆனால், இப்போது அதற்கு ‘தண்டனை’ கொடுக்கும் வகையில் வட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், “இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மொழி, கலாசாரம், மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதலிலும், ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுப்பதிலும் தென் மாநிலங்களின் குரல் பலவீனமடையும். நிதிப் பகிர்விலும் பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே தமிழ்நாடு நிதிப் பகிர்வில் இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், இந்த மசோதா மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று எச்சரித்தார்.

தவெக தலைவர் விஜய், “ஒன்றிய அரசு இந்த அவசர மசோதாவை கைவிட வேண்டும். தற்போதுள்ள பழைய நடைமுறையைத் தொடர வேண்டும். தென் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க தவெக உறுதியாகப் போராடும்” என்று வலியுறுத்தினார்.இந்த மசோதா தொடர்பாக தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

unknown node