“விஜய்யுடன் காங்கிரஸ் பேச்சு நடந்திருக்கலாம்” – கிரிஷ் சோடங்கர் பேட்டி!

காங்கிரஸ் ஒரு ஜனநாயக இயக்கம் இங்கே பலகுரல்களுக்கும் இடம் உண்டு என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

girish chodankar vijay

சென்னை :தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் உள் கருத்து வேறுபாடுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தமிழக வெற்றிக்கழகம் (தவெக) மற்றும் திமுக ஆகியவற்றுக்கு காங்கிரஸில் இரு வேறுபட்ட குழுக்கள் ஆதரவாக இருப்பதாக சில தகவல்கள் பரவியுள்ளன.காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஷ் சோடங்கர் இது குறித்து தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் “காங்கிரஸ் ஒரு ஜனநாயக இயக்கம். இங்கே பல குரல்களுக்கும் இடம் உண்டு” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கட்சியில் பல தலைவர்கள் இருப்பதால், அவர்களில் சிலர் தனிப்பட்ட முறையில் தவெக அல்லது திமுகவுடன் பேசியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.கிரிஷ் சோடங்கர் மேலும் தெரிவித்ததாவது, “தனிப்பட்ட முறையில் தவெக எங்களின் பலத்தை அங்கீகரிக்கிறது என்று மட்டும்தான் பேசியிருந்தேன்.

எங்களின் கட்சி ஒரு பேரியக்கம். பல்வேறு மட்டங்களில் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது விஜய்யுடன் பேசியிருக்கலாம். விஜய்யுடன் காங்கிரஸ் பேசவே இல்லை என மறுக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக தவெகவுடன் கூட்டணி பேசவில்லை என்று தெளிவாகியுள்ளது.இந்த பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் தவெக மற்றும் திமுக ஆகிய இரு தரப்புகளுக்கும் ஆதரவு உள்ளதாக எழுந்த வதந்திகளுக்கு இது ஒரு தெளிவான பதிலாக அமைந்துள்ளது. கட்சி ஜனநாயக இயக்கம் என்பதால் தனிப்பட்ட கருத்துகளுக்கு இடம் உண்டு என்றும், அதிகாரப்பூர்வ கூட்டணி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கிரிஷ் சோடங்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக, தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி விவகாரங்கள் மற்றும் கட்சிகளுக்கிடையேயான உறவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. கிரிஷ் சோடங்கரின் இந்த விளக்கம் தவெக – காங்கிரஸ் இடையேயான உறவு குறித்த வதந்திகளை தற்காலிகமாக குறைத்துள்ளது. தற்போது காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடர்வதாகவே பார்க்கப்படுகிறது.