ஸ்காட்லாந்து : கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் சார்பில் களமிறங்கிய தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி அபாரமாகச் செயல்பட்டு வெள்ளிப் பதத்தைக் கைப்பற்றியுள்ளார்.
இப்போட்டியில் அவர் ஸ்நாட்ச் பிரிவில் 126 கிலோவும், கிளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோவும் என மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்து, இந்தியாவுக்கு இன்றைய நாளின் மூன்றாவது பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.
வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய 26 வயதான ராஜா முத்துப்பாண்டி, தங்கம் வெல்ல முடியாதது குறித்துத் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது பயிற்சியாளர் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, தங்கம் வெல்வதற்காக முழு முயற்சியைச் செய்வோம் என்று நம்பினார்.
ஆனால், நான் எதிர்பார்த்தபடி சிறப்பாகச் செயல்படவில்லை என்பதால் எனக்கு நிச்சயம் ஏமாற்றமே. இந்த வெற்றியை எனது பெற்றோருக்கும், எனது பயிற்சியாளர் விஜய் ஷர்மாவுக்கும் சமர்ப்பிக்கிறேன். இந்தத் தொடரிலிருந்து பெற்ற பாடங்களைக் கொண்டு எனது பயிற்சியில் முழு கவனம் செலுத்துவேன். இனி பயிற்சியாளரின் அறிவுறுத்தல்களின்படி தீவிரமாக உழைப்பேன்" என்று தெரிவித்தார்.
இதே பிரிவில் மலேசியாவின் அஸ்னில் பின் பிடின் முஹமத் (Aznil Bin Bidin Muhamed) ஒட்டுமொத்தமாக 299 கிலோ எடையைத் தூக்கி காமன்வெல்த் சாதனையுடன் தங்கம் வென்றார். இதன் மூலம் அவர், கோல்டுகோஸ்ட் 2018 மற்றும் பர்மிங்காம் 2022 ஆகிய தொடர்களின் வெற்றிகளைத் தொடர்ந்து, தனது மூன்றாவது தொடர்ச்சியான காமன்வெல்த் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
ராஜா முத்துப்பாண்டியின் இந்த வெள்ளிப் பதக்கப் பயணம் எளிதானதல்ல; கடந்த 2019-ம் ஆண்டில் ஏற்பட்ட தீவிரமான முங்கை எலும்பு (elbow ligament) காயம் காரணமாக அவரது கரியரே கேள்விக்குறியானது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கோவிட்-19 தொற்று ஊரடங்கு மற்றும் ஜெர்மி லால்ரினுங்கா (Jeremy Lalrinnunga) அதிக எடைப் பிரிவில் களமிறங்கியது போன்ற காரணங்களால் 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் அவரால் இடம்பிடிக்க முடியவில்லை.
இந்தச் சோதனைகளைக் கடந்து, புதிய 65 கிலோ எடைப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தேசிய அணிக்குத் திரும்பிய அவர், 2025 உலகச் சாம்பியன்ஷிப்பில் 9-வது இடம் பிடித்ததுடன், தனிப்பட்ட முறையில் தனது சிறந்த எடையான 299 கிலோவைப்பதிவு செய்து தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.
