சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை இன்று முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் உரையாற்றிய பிறகு வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தனது அரசுக்கு ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகியவை தவெக அரசுக்கு தங்களது முழு ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ்குமார் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி இந்த அரசுக்கு ஆதரவை வழங்குகிறது. 107 இடங்களில் வெற்றி பெற்று மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது தவெக. ராகுல் காந்தி வழிகாட்டுதல்படி எப்போதும் உங்களுக்கு உறுதியாக இருப்போம். கட்சி வேறுபாடு இன்றி அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்லசுவாமி பேசுகையில், “இந்த அரசுக்கு சிபிஎம் முழு ஆதரவு அளிக்கிறது. தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி மூலம் மறைமுக பாஜக ஆட்சி அமைவதை தடுக்க தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளோம். அரசு நல்லது செய்யும்போது ஆதரிப்போம்; தவறு செய்தால் விமர்சிப்போம்” என்றார்.
தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, IUML உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தற்போது 120 எம்எல்ஏக்களின் பலத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்றைய வாக்கெடுப்பின் முடிவு தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
