சென்னை :தவெக தலைவர் விஜய் இன்று (ஜனவரி 12) டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், 11 மணியளவில் சிபிஐ அலுவலகம் சென்றடைந்தார். விசாரணை தொடங்கியுள்ள நிலையில், சம்பவத்தின் போது அவரது பிரச்சார வாகனத்தின் வருகை தாமதம், நெரிசல் ஏற்பட காரணம், கூட்ட ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இது சிபிஐயின் வழக்கமான நடைமுறை விசாரணையாக இருந்தாலும், அரசியல் பின்னணி காரணமாக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.விஜய் ஆஜரான நிலையில், சிபிஐ அலுவலகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் அதிக அளவில் கூடுவதைத் தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு அமைந்துள்ளது. விசாரணை முடியும் வரை அவர் அலுவலகத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அவரது வாக்குமூலம் சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக்கொணரும் என சிபிஐ தரப்பு நம்புகிறது.கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது.
விஜய்யின் பிரச்சார வாகனம் ஏற்கனவே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய விசாரணை முடிந்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சிபிஐ முடிவு செய்யும். இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இது குறித்து பேசி வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விஜய்யின் சிபிஐ விசாரணை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “சிங்கத்தின் வாயில் தானாக சிக்கியதை போல தானாக சென்று சிபிஐயிடம் சிக்கியுள்ளார் விஜய். அரசியல் கூட்டணிக்காக பாஜக செய்யும் முயற்சி ஒருபோதும் தமிழ்நாட்டில் வெற்றியடையாது. பாஜகவுக்கு சாதகமாக வரவில்லை என்றால் அனைத்தையும் சிதைப்பார்கள். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை தமிழ்நாடு அரசு சிறப்பாக விசாரித்து வந்தது” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், “ஆட்சியில் பங்கு இல்லை என்பது அமைச்சர் ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து” என்றும் தெரிவித்தார். செல்வப்பெருந்தகை, மராட்டியத்தில் அண்ணாமலைக்கு சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தது குறித்து பதிலளித்தார். காங்கிரஸ் செய்த அடாவடிகளையும், துரோகங்களையும் ‘பராசக்தி’ படம் காட்டியுள்ளது என்ற அண்ணாமலையின் கருத்துக்கு பதிலடி கொடுத்த அவர், பாஜகவின் அரசியல் உத்திகளை கடுமையாக சாடியுள்ளார். இந்தக் கருத்துகள் தமிழக அரசியலில் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளன.
