நெல்லை :2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி (CBCID) விசாரணையில் பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்தது உறுதியாகியுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதாகக் கருதப்படும் ரூ.4 கோடி கோடி பணம் ரயிலில் பயணித்தவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்காக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, மக்களவைத் தேர்தலின்போது நெல்லை எக்ஸ்பிரஸில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாத்தில் பாஜக நிர்வாகிகள் எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம், கோவர்தன் ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்ய உதவியதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது, பாஜகவின் தொழில் பிரிவு நிர்வாகியும், கொரியன் ரெஸ்டாரன்ட் உரிமையாளருமான கோவர்தன், ஓட்டுநர் விக்னேஷ் என்பவர் மூலமாக தங்கக் கட்டிகளுக்கு பதிலாக 97.92 லட்சம் ரூபாய் பணத்தை சூரஜ் என்ற ஹவாலா தரகரிடம் கைமாற்றியது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்தத் தகவல் கால் டேட்டா ரெக்கார்டு மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக ஹவாலா தரகர் சூரஜ் ஜாமீன் கோரிய மனுவுக்கு சிபிசிஐடி நீதிமன்றத்தில் பதில் தெரிவித்தது.
