இன்று பிரச்சாரம்...தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டார் த.வெ.க. தலைவர் விஜய்!

விஜய் இன்று பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில், மரக்கடை பகுதியில் காலை முதலே தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

tvk vijay tn

சென்னை :தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தனது முதல் கட்ட மாநில சுற்றுப்பயணத்தை இன்று (செப்டம்பர் 13, 2025) திருச்சியில் தொடங்குகிறார். இதற்காக, இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவர், திருச்சிக்கு பயணித்தார். “உங்க விஜய் நா வரேன்” என்ற தலைப்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே காலை 10:35 மணிக்கு தொடங்க உள்ளார்.

இதற்காக தவெக தொண்டர்களும், விஜய்யின் ரசிகர்களும் காலை முதலே மரக்கடை பகுதியில் திரளாக குவிந்து வருகின்றனர்.தவெகவின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், இந்த பிரச்சாரத்திற்கு திருச்சி மாவட்ட காவல்துறையிடம் 23 நிபந்தனைகளுடன் அனுமதி பெற்றுள்ளார். காலை 10:35 முதல் 11:00 மணி வரை மட்டுமே பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளை நிகழ்ச்சிக்கு அழைத்து வரக்கூடாது என்று காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட வழித்தடத்தை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணம், திருச்சி, பெரம்பலூர், மற்றும் அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கி, முதல் கட்டமாக 5 வாரங்களும், மொத்தமாக 10 வாரங்களும் நீடிக்கும்.விஜய்யின் இந்த மக்கள் சந்திப்பு, உள்ளூர் பிரச்சனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதோடு, தவெகவின் கொள்கைகளையும் விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

திருச்சியில் நடைபெறும் இந்த பிரச்சாரம், தவெகவின் அரசியல் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. பெரம்பலூரில், மேற்கு வானொலித்திடல் பகுதியில் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது, ஆனால் குன்னம் பேருந்து நிலையம் மற்றும் காமராஜர் வளைவு பகுதிகளுக்கு மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.