ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் வாபஸ் - தமிழக அரசு அறிவிப்பு!

முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற முதல் நியமனமாக, கட்சியின் செய்தித் தொடர்பாளரும் ஜோதிடருமான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து, அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் பதவியேற்ற உடனேயே முதல் அரசு உத்தரவாக இந்த நியமனம் செய்யப்பட்டது. ஆனால், தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ், சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் இந்த நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும், ஆளுங்கட்சிக்கு ஆதரவான இந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் இந்த நியமனத்தை கடுமையாக விமர்சித்தனர்.

“அரசு குடும்பத்திலிருந்து வராதவர் என்று சொன்ன முதலமைச்சர், தனது ராஜகுருவை அரசு பதவியில் அமர்த்தியது ஏன்?” என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நியமனம் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும், அரசியல் நியமனங்களில் தனிப்பட்ட உறவுகளுக்கு முன்னுரிமை அளிப்பது நல்லாட்சிக்கு எதிரானது என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த எதிர்ப்பு அலையை அடுத்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு இந்த அரசாணையை திரும்பப் பெறும் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம், அரசியல் சூழலில் ஏற்பட்ட அழுத்தத்தை சமாளித்து, அரசின் முதல் நடவடிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்துள்ள இந்த அரசு, முதல் நியமனத்திலேயே எழுந்த சர்ச்சையை விரைவில் தீர்த்துக்கொண்டது.