ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்: தமிழ்நாட்டு வீரர் வெண்கலம் வென்றார்.!

ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் ரமேஷ் புத்திஹால் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Aasiansurfing -Ramesh

சென்னை :ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் 2025 தொடரில் முதல் முறையாக இந்திய வீரர் ரமேஷ் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற 4வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 3 முதல் 12 வரை நடைபெறுகிறது.

இந்தப் போட்டி ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு (ASF) மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு (SFI) இணைந்து, தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது. இந்தியா, ஜப்பான், சீனா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்திய அணியில் 12 பேரில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், அவர்கள் கிஷோர் குமார், ஸ்ரீகாந்த், கமலி மூர்த்தி, ஸ்ரீஸ்தி செல்வம், தயன் அருண், ஹரிஷ், பிரகலாத் ஸ்ரீராம், தமயந்தி ஸ்ரீராம் ஆவர். தமிழக வீரர்கள் மாமல்லபுரம் மற்றும் கோவளம் கடற்கரைகளில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டனர். உள்ளூர் அலைகளின் தன்மையை நன்கு அறிந்திருப்பதால், தமிழக வீரர்கள் வெற்றிக்கு பெரும் வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தனர்.

அதன்படி, இதில் ஆண்கள் ஓபன் பிரிவு இறுதிப்போட்டியில் 12.60 புள்ளிகளுடன் தமிழ்நாட்டு வீரர் ரமேஷ் மூன்றாவது இடத்தைப் பிடித்து, வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம், இந்தியர் ஒருவர் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். மேலும் தமிழ்நாட்டு வீரர்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.