வாக்கு வாங்குவதற்கான கருவியா குழந்தைகள்? விஜய் மீது விசிக நிர்வாகி புகார்!

த.வெ.க தலைவர் விஜய் பேசியதைக் கேட்டு, எனது 5 வயது மகன் என்னிடம் விஜய்க்கு வாக்களிக்குமாறு அழுது அடம்பிடித்தான் என வி.சி.க. தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Hero Image

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய், தேர்தலுக்கு முந்தைய கடைசி பிரச்சாரத்தில் பேசிய ஒரு வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அந்தப் பேச்சில், இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் குட்டிஸ் “உங்களுக்கு சாக்லேட் வேணும்னா அழுது அடம்பிடிச்சு வாங்குவீங்க இல்ல... அதே மாதிரி உங்களுக்குப் பிடிச்ச விஜய் மாமாவுக்காக, தமிழ்நாடு ஜெயிக்கணும்ன்றதுக்காக, உங்க வீட்டில் இருக்கிற அம்மா, அப்பா, அண்ணன், அக்கா எல்லார்கிட்டயும் விசில் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொல்லுங்க. யாராவது ஓட்டு போடாமல் வீட்டில் உட்கார்ந்திருந்தா, அவங்க காதுல போய் அன்பா விசில் ஊதி ஓட்டு போட ஓட வையுங்க” என்று கூறியிருந்தார்.

இந்தப் பேச்சு வெளியான பிறகு, கோவையைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது“என் 5 வயது மகன், விஜய் மாமாவுக்கு ஓட்டு போடவில்லை என்றால் சாப்பிட மாட்டேன், படிக்க மாட்டேன் என்று அழுது அடம்பிடித்தான்.

‘விஜய் மாமா ஜெயிக்கவில்லை என்றால் நான் சாப்பிடவே மாட்டேன்’ என்று தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி அழுது வருகிறான். விஜய்க்கு ஓட்டு போட்டதாக பொய் சொல்லி அவனை சமாதானப்படுத்த படாத பாடு பட்டேன். விஜய் இப்படி குழந்தைகளை ஓட்டு வாங்கும் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இப்படி எத்தனை பெற்றோர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது தெரியவில்லை.உடனே விஜய் பேசிய அந்த வீடியோவை தூக்க வேண்டும்.இதுதொடர்பாக நான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவேன்” என்று கூறினார்.

பாலகிருஷ்ணன் மேலும் கூறுகையில், “குழந்தைகள் சாக்லேட்டுக்காக அடம்பிடிப்பது போல, பெற்றோரிடம் அடம்பிடித்து தனக்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும் என விஜய் பேசியது, பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கும் செயல். இதனால் பல குழந்தைகள் உளவியல் சிக்கல்களைச் சந்திக்கின்றனர். இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்” என்றும் வலியுறுத்தினார்.

வாக்கு வாங்குவதற்கான கருவியா குழந்தைகள்? விஜய் மீது விசிக நிர்வாகி புகார்!