ஈபிஎஸ் தலைமையில் தொடர் தோல்வி... அதிமுக வாக்கு வங்கி சரிகிறது - சிவி சண்முகம் தாக்கு!

கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என இபிஎஸ் நிர்வாகிகளை மிரட்டி வைத்துள்ளார் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த கடுமையான தோல்விக்குப் பிறகு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து 80க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தற்போதைய நிலை, தேர்தல் தோல்விக்கான காரணங்கள், கட்சியை மீண்டும் வலுப்படுத்துவது, கூட்டணி அரசியல் மற்றும் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், “இக்கட்டான சூழலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டம் முடிந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து கட்சியின் தற்போதைய நிலை குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். அவர் பேசுகையில், “அதிமுக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.

இரண்டு நாடாளுமன்றத் தேர்தல், இரண்டு சட்டமன்றத் தேர்தல் மற்றும் பல இடைத்தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கி தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது கட்சிக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது” என்று கூறினார்.

மேலும், “இந்த தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும், கட்சியை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும், இளைஞர்களை அதிகமாக இணைக்க வேண்டும் என்று நாங்கள் பலமுறை கூறினோம். ஆனால் எங்களுடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், “பிரிந்து சென்றவர்களையும், நீக்கப்பட்டவர்களையும் மீண்டும் இணைத்து ஒரு வலிமையான அதிமுகவை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம் கூட எந்தப் பொறுப்பும் வேண்டாம், ஒரு சாதாரண உறுப்பினராகவே இருக்கிறேன் என்று கூறியபோதும் அவரை மீண்டும் இணைக்க மறுத்துவிட்டார்கள்” என்று சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.

கூட்டணி அரசியல் குறித்தும் அவர் முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “வலிமையான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று அனைவரும் கூறினோம். தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதை உதாசீனப்படுத்திவிட்டார்கள். அதேபோல் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் அரவணைக்காததால் கூட்டணி பலவீனமடைந்தது” என்று தெரிவித்தார்.

இறுதியாக, “நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லவில்லை. ஆனால் கட்சியில் நடந்த தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டினோம். சரியான நேரத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்திருந்தால் இன்று அதிமுகவின் நிலை வேறு மாதிரியாக இருந்திருக்கும்” என்றும் சி.வி.சண்முகம் கூறினார்.