அதிமுக-வின் 6-வது விக்கெட் காலி! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி ராஜினாமா!

கரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இதனை ஏற்றுக்கொண்டார்.

Hero Image

சென்னை : தமிழக அரசியல் களத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், கரூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்களின் அறைக்கு நேரில் சென்ற அவர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை விலகுவதற்கான கடிதத்தைக் கையால் எழுதிக் கொடுத்துள்ளார். இந்த ராஜினாமா கடிதம் விதிமுறைகளின்படி சரியாக இருந்ததால் சபாநாயகரால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு பொறுப்பேற்றது முதல் அதிமுக-வில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து விலகும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னதாகத் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சி கொறடாவின் உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களில் ஒருவர்தான் இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமை மற்றும் உட்கட்சி முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ராஜினாமா முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இவருக்கு முன்பாக ஏற்கனவே அதிமுக-வைச் சேர்ந்த கே. மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்யபாமா,இசக்கி சுப்பையா, டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, இதில் முதல் நான்கு பேர் அதிகாரப்பூர்வமாகத் தவெக-வில் இணைந்துள்ள சூழலில், தற்பொழுது 6-ஆவதாக எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது பதவியை விலகியுள்ளார்.

வரும் ஜூலை 2-ஆம் தேதி அவர் தவெக-வில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் மிகத் தீவிரமாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. இதனால் கரூர் உள்ளிட்ட தொகுதி மக்கள் மத்தியிலும், அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் இந்த அடுத்தடுத்த விக்கெட்டுகள் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.