பாஜக எதைச் சொன்னாலும் ஆதரிக்கும் நிலையில்தான் அதிமுக உள்ளது...முதல்வர் ஸ்டாலின் சாடல்!

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் மூலம் திமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் எடுபடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

edappadi palanisamy and mk stalin

சென்னை :திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை கலைஞர் திடலில் நடைபெற்ற திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது “எதற்கும் அஞ்சாமல் சுறுசுறுப்புடன் இயங்குவதால் 75 ஆண்டுகளாக இளமையுடன் இருக்கிறது திமுக. ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறேன். புதுப்புது யுக்திகளுடன் நம்மை அழிக்க எதிரிகள் முயன்று வருகின்றனர். பல்வேறு மத்திய அமைப்புகள் மூலம் நம்மை மிரட்டலாம் என எண்ணுகின்றனர். அது நடக்காது. திமுகவினரும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, “எதிரிகள் புது புது உத்திகளோடு நம்மை அழிக்க அவதாரம் எடுத்து வருகிறார்கள். சிபிஐ, வருமான வரித்துறை போன்ற ஆயுதங்களை எடுத்து மிரட்டி பார்த்தார்கள். ஒ20 ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது S.I.R என்ற ஆயுதத்தை எடுத்து திமுகவை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் ஒருகாலும் திமுகவை யாராலும் அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் மூலம் திமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் எடுபடாது.”“மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் SIR-ஐ அதிமுக ஆதரிக்கிறது.

திமுக மனு தாக்கல் செய்த பிறகு ஏமாற்றுவதற்காக அதிமுகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. எஸ்ஐஆர் குறித்து உள்ளபடி அக்கறை இருந்தால் அதிமுக முன்கூட்டியே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்துக் கொண்டிருக்கிறது. SIR-ஐ எதிர்க்க இ.பி.எஸ்.-க்கு தைரியமில்லை. டெல்லியில் உள்ள பிக்பாஸுக்கு ஆமாம் சாமி எனச் சொல்லித்தான் ஆக வேண்டும்.” எனவும் தெரிவித்தார்.

மேலும், “பாஜகவும் தேர்தல் ஆணையமும் எதைச் சொன்னாலும் ஆதரிக்கும் நிலையில்தான் அதிமுக உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடுத்த வழக்கில் அதிமுக தங்களையும் இணைத்துக்கொண்டு கபட நாடகம் ஆடுகிறது. SIR-க்கு எதிராக நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.”“நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பதற்குத்தான் பெயர் இயக்கம். திமுகவினர் தொடர்ந்து இயங்க வேண்டும்.” எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.