“ஜனநாயகத்திற்கு எதிரானது” – பிரச்சாரம் தடை குறித்து விஜய் கண்டனம்!

தேர்தல் பரப்புரைக்கு அனுமதி மறுப்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள பாசிசத் தாக்குதல் என விஜய் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், தனது பிரச்சார நிகழ்வுக்கு சென்னை மாநகரக் காவல்துறை மற்றும் சில அதிகாரிகள் இணைந்து முட்டுக்கட்டை போடுவதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வரும் மார்ச் 28-ஆம் தேதி பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தவெக சார்பில் இரண்டு நாட்களுக்கு முன்பே (மார்ச் 26) அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பு திடீரென அந்த இடத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் அந்த இடத்தில் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து காவல்துறை ஆய்வு செய்து, “இந்த இடத்தில் 3,000 பேர் வரை கூட முடியாது. அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்று கூறி, தவெகவின் அனுமதி மனுவை நிராகரித்துள்ளது. மாற்று இடம் கோரி விண்ணப்பிக்குமாறு மட்டுமே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள தவெக தலைவர் விஜய், “இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட பாசிசத் தாக்குதல் ஆகும். தி.மு.க. ஆட்சியின் காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், “தவெக சார்பில் பிரச்சாரம் செய்ய முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி அனுமதியைத் தாமதப்படுத்துவதும், மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

மக்களின் பேராதரவு பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக சில அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.“தவெகவைக் கண்டு தி.மு.க. எந்த அளவுக்கு பயப்படுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோத தி.மு.க. ஆட்சியை தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி” என்று விஜய் உறுதியுடன் கூறியுள்ளார்.

unknown node