வளர்ந்த நாட்டுக்கு வளர்ந்த தமிழ்நாடு அவசியம் – பிரதமர் மோடி ஸ்பீச்!

தமிழ்நாடு வளர்ச்சிக்காக அயராது பாடுபடுகிறோம், தொடர்ந்து பாடுபடுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Featured image

திருச்சி :மாவட்டம் பஞ்சப்பூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மொத்தம் ரூ.5,655 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக அமைந்தது.ரூ.3,680 கோடி மதிப்பீட்டில் இயற்கை எரிவாயு விநியோக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்.

இத்திட்டம் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியது. இதன் மூலம் சுமார் 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் நேரடியாக சமையல் எரிவாயு வழங்கப்படும். இது வீட்டு உபயோகத்தை எளிதாக்குவதோடு, நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்களுக்கும் பயனளிக்கும்.ரூ.1,490 கோடி மதிப்பிலான மசகு எண்ணெய் கலவை ஆலையை (Lube Oil Blending Plant) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சென்னை மணலியில் அமைக்கப்பட்ட இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இந்த ஆலை தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும். இதன் மூலம் எண்ணெய் தயாரிப்பு திறன் அதிகரிக்கும்.கங்கை கொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டம் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, பசுமை சூழலை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. மேலும் 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பாசஞ்சர் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ரூ.3,700 கோடி மதிப்பிலான பாரத் பெட்ரோலியம் சிட்டி கேஸ் விநியோக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்கும். காற்று மாசுபாடு குறையும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இது 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையான பயனை அளிக்கும்” என்று கூறினார்.

பிரதமர் மேலும் கூறியதாவது, “வளர்ந்த நாட்டுக்கு வளர்ந்த தமிழ்நாடு அவசியம். மேம்பட்ட இந்தியாவை உருவாக்குவதற்கு மேம்பட்ட தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்கள் இலக்கு. தமிழ்நாடு வளர்ச்சிக்காக அயராது பாடுபடுகிறோம். தொடர்ந்து பாடுபடுவோம்” என்று உறுதியளித்தார். இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி துறை வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக அமைந்தது.