நெல்லை, டெல்டாவுக்கு நோ... கன்னியாகுமரிக்கு எஸ்!அமைச்சரவையில் இடம்பெறாத 19 மாவட்டங்கள்!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் நீலகிரி, நெல்லை, விழுப்புரம், கரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இடம் கிடைக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hero Image

சென்னை : தமிழகத்தில் புதிய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றுள்ள நிலையில், பல மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மொத்தம் 19 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் புதிய அமைச்சரவை பட்டியலில் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 21 பேரும், கூட்டணி கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த 2 பேரும் இடம்பெற்றுள்ளனர். ஆனால் மாவட்ட வாரியான பிரதிநிதித்துவத்தை பார்க்கும்போது, பல முக்கிய மாவட்டங்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

அதன்படி, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமைச்சரவை பட்டியலில் இடம்பெறவில்லை.

குறிப்பாக, வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில முக்கிய பகுதிகளுக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். “அனைத்து மாவட்டங்களுக்கும் சமநிலையான வாய்ப்பு வழங்கப்பட வேண்டியது அவசியம்” என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறாத நிலையிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு அந்த மாவட்டத்தின் மூலம் அமைச்சரவை பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருப்பதும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக வெடித்துள்ளது.

இதனால், “வெற்றி பெற்ற மாவட்டங்களை விட கூட்டணி சமநிலைக்கும் அரசியல் முக்கியத்துவத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டதா?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது.