தமிழ்நாட்டிற்கு 5 தலைநகரங்கள்! -தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான்!

நாம் தமிழா் கட்சியின் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தோ்தலுக்கான தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா் சீமான்

NTK Seeman

சென்னை :தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக வேலை செய்து வருகிறது. ஒரு பக்கம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகளும் மற்றொரு பக்கம் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. இப்படியான பரபரப்பான சூழலில், சீமான் தலைமயிலான நாம் தமிழர் கட்சி அரசியல் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை அதிரடியாக வெளியிட்டுள்ளது. மொத்தமாக 49 தலைப்புகளில் 462 பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

49 தலைப்புகளில் 462 பக்கங்கள் கொண்ட இந்த தேர்தல் அறிக்கை “மாற்றத்திற்கான வழி” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் 5 தலைநகரங்கள் அமைப்பது, இட ஒதுக்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைப்பது, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு தனித் தொகுதிகள் கோருவது உள்ளிட்ட அதிரடி வாக்குறுதிகள் இதில் அடங்கியுள்ளன.

முக்கிய வாக்குறுதிகளில் சில: திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனை அமைப்பது, சிபா ஆதித்தனார் பெயரில் விளையாட்டு பல்கலைக்கழகம் தொடங்குவது, எல்லா ஊர்களிலும் விளையாட்டு பயிற்சி கூடங்கள் அமைப்பது, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழித்து தமிழ் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்துவது, தமிழ்நாட்டு ரயில்வே நிர்வாகத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சீமான் பேசியபோது, “தமிழ்நாட்டை சீரழிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக இந்த அறிக்கை போர்க்கொடி. தமிழ் மக்களின் உரிமை, அடையாளம், சுயாட்சி, சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவை இதன் மையக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.இந்த அறிக்கை நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரும் அடித்தளமாக அமைந்துள்ளது.

21 கட்சிகள் கொண்ட திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மூன்றாவது அணியாக நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதால், இந்த அறிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.ஒட்டுமொத்தமாக, 462 பக்க அறிக்கையில் தமிழ் இன உரிமை, சுயாட்சி, சமூக நீதி, பொருளாதார சீர்திருத்தம், பெண்கள் மற்றும் திருநங்கைகள் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விளையாட்டு வளர்ச்சி, ரயில்வே உரிமை போன்ற பல்வேறு தலைப்புகளில் அதிரடி வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.