லடாக்கில் வெடித்த கலவரம் : காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கைது!

லடாக்கில் நடந்த வன்முறைக்கு சோனம் வாங்சுக்தான் காரணம் என உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sonam Wangchuk Arrested

டெல்லி :லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து, நான்கு பேர் உயிரிழந்து 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலரும் ராமன் மக்சேசே விருது பெற்றவருமான சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 25 அன்று, ” இந்த காரணத்திற்காக எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவதற்கு தயார்” என்று அவர் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்தக் கைது நடந்தது.

மத்திய அரசு, வாங்சுக் தூண்டுதல் பேச்சுகளால் கூட்டத்தை வன்முறைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டியுள்ளது.கைதுக்கு ஒரு நாள் முன்பு, வாங்சுக்கின் ‘ஸ்டூடென்ட்ஸ் எஜுகேஷனல் அண்ட் கல்ச்சுரல் மூவ்மென்ட் ஆஃப் லடாக்’ (SECMOL) அமைப்பின் வெளிநாட்டு நிதி பெறுவதற்கான FCRA பதிவு மத்திய உள்துறை அமைச்சகத்தால் ரத்து செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கை, வாங்சுக்கின் நடவடிக்கைகளை அரசு கண்காணித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், வாங்சுக் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, தனது அமைப்பு வெளிநாட்டு நிதி பெறவில்லை என்றும், ஐ.நா., சுவிஸ், இத்தாலி அமைப்புகளுடன் வணிக பரிவர்த்தனைகள் மட்டுமே செய்து, அனைத்து வரிகளையும் செலுத்தியதாகவும் NDTV-யிடம் தெரிவித்தார்.

லடாக்கில் செப்டம்பர் 24 அன்று நடந்த லெஹ் அபெக்ஸ் பாடி (LAB) ஏற்பாடு செய்த போராட்டம், வேலைவாய்ப்பின்மை மற்றும் உள்ளூர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இல்லாமை போன்ற பிரச்சினைகளை மையமாகக் கொண்டு வன்முறையாக மாறியது. இதில் BJP அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு, வாகனங்கள் அழிக்கப்பட்டன. வாங்சுக்கின் அரபு ஸ்பிரிங் மற்றும் நேபாள ஜென் Z இயக்கங்கள் பற்றிய குறிப்புகள் தூண்டுதலாக இருந்ததாக அரசு குற்றம்சாட்டியது. வாங்சுக் தனது 15 நாள் உபவாசத்தை நிறுத்தி, கூட்டத்தை அமைதிப்படுத்த முயன்றதாகக் கூறினாலும், அரசு அவரை பொறுப்பாக்க முயலுவதாக விமர்சித்தார்.

மத்திய அரசு, உயர் அதிகார குழு மூலம் லடாக் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், பழங்குடி இடஒதுக்கீட்டை 84% ஆக உயர்த்தியதாகவும், 1800 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு தொடங்கியதாகவும் கூறுகிறது. ஆனால், வாங்சுக் இவை போதுமானதல்ல என்று வாதிடுகிறார். கைதைத் தொடர்ந்து, லெஹ் மற்றும் கார்கிலில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். லெஃப்டினன்ட் கவர்னர் கவிந்தர் குப்தா, அமைதியை உறுதி செய்ய பாதுகாப்பு கூட்டம் நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.