டெலிகிராம் தடைக்குப் பின்னால் ரிலையன்ஸ் & மெட்டா சதி! கொதிக்கும் சிஇஓ பாவெல் துரோவ்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் பயன்படுத்தப்பட்டதால், ஜூன் 22 வரை இந்தியாவில் செயலிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Hero Image

டெல்லி : இந்தியாவில் நீட் மறுதேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்காக டெலிகிராம் (Telegram) செயலிக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை, தற்பொழுது சர்வதேச அளவில் ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் மற்றும் அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் செயலி பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ள சூழலில், இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு வருகிற ஜூன் 22-ஆம் தேதி வரை தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு குறித்து டெலிகிராம் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான (CEO) பாவெல் துரோவ் (Pavel Durov), மத்திய அரசின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளதோடு, இதன் பின்னணியில் ரிலையன்ஸ் மற்றும் மெட்டா (Reliance & Meta) ஆகிய நிறுவனங்களின் சதி வேலைகள் இருப்பதாக அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்த அதிரடித் தடை குறித்துத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பாவெல் துரோவ், சில பயனர்கள் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த செயலியைத் தடை செய்வது தவறான கொள்கை என்று குறிப்பிட்டுள்ளதோடு பின்வரும் விபரங்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில் " இந்தியாவில் சில பயனர்கள் தேர்வு வினாத்தாள்களைப் பகிர்ந்துகொண்டனர் என்பதற்காக, அங்குள்ள 15 கோடிக்கும் (150M+) அதிகமான சாதாரண டெலிகிராம் பயனர்களைத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தண்டித்துள்ளது. வினாத்தாள்களைக் கசியவிட்ட உண்மையான குற்றவாளிகளை விடுத்து, செயலியைத் தடை செய்ததன் மூலம் எதுவும் மாறிவிடப் போவதில்லை. தற்பொழுது அந்த வினாத்தாள் கசிவுகள் மற்ற சமூக வலைதள செயலிகளுக்கு இடம்மாறிவிட்டன" என்று அவர் சாடியுள்ளார்.

கடந்த சில வாரங்களில் மட்டும் இந்தியாவில் வினாத்தாள்களைப் பகிர்ந்த மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான சேனல்களைத் டெலிகிராம் நீக்கியுள்ளது என்றும், பழைய பதிவுகளை மாற்றி மோசடி செய்வதைத் தடுக்க 'Edited' என்ற லேபிளை தற்பொழுது இன்னும் தெளிவாகக் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெலிகிராம் எப்போதுமே நல்ல விஷயங்களுக்கான ஒரு சக்தி என்றும், அதனைத் தற்காலிகமாகத் தடை செய்வது ஒரு மிகப்பெரிய தவறு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டெலிகிராம் தடைக்குப் பின்னால் ரிலையன்ஸ் & மெட்டா சதி! கொதிக்கும் சிஇஓ பாவெல் துரோவ்!