குற்றம் செய்திருந்தாலும் இனிமேல் கர்ப்பிணிகளுக்கு ஜெயில் தண்டனை கொடுக்க கூடாது – இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம்!
குற்றம் சாட்டப்பட்ட பெண் கர்ப்பிணியாக இருக்கும் பட்சத்தில், அந்த பெண்ணுக்கு ஜாமீன் தான் வழங்கப்பட வேண்டும், தண்டனைகள் ஏதும் வழங்கப்பட கூடாது என இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் போதை பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அந்த பெண் கர்ப்பிணியாக இருந்த காரணத்தினால் அவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனூப் சிட்காரா அடங்கிய அமர்வு, கர்ப்பிணி பெண்ணின் ஜாமீன் மனுவிற்கு அனுமதி கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து கூறிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட பெண் கர்ப்பிணியாக இருக்கும் பட்சத்தில் அந்தப் பெண்ணுக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் எனவும் அவருக்கு சிறை தண்டனை கொடுக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட கர்ப்பிணி பெண் செய்த குற்றம் பெரியதாக இருந்தாலும் கூட கர்ப்பிணியாக இருப்பதால் எந்தவிதமான கட்டுப்பாடுகளுமின்றி அவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும் எனவும், குழந்தை பெற்ற ஒரு வருடத்திற்கு பின்னும் கூட எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருக்க கூடாது எனவும், பிரசவத்தின் போது வருத்தப்பட வைக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணாக இருந்தாலும் தாய்மையின் போது பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் நீதிபதி சிட்காரா அவர்கள் தெரிவித்துள்ளார்.