போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்! 

பாதுகாப்புத் துறையின் முக்கிய நடவடிக்கைகளை நேரடியாக உடனுக்குடன் தெரிவிக்க வேண்டாம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Ministry of Defence Rajnath Singh

டெல்லி: இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை நோக்கி பாகிஸ்தான் ஏவிய டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது.  இந்த அசாதாரண சூழல் குறித்து மத்திய அரசும் தொடர்ந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.

ஏற்கனவே நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் , இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை. இங்கு பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை பொதுவெளியில் பாதுகாப்பு கருதி கூறமுடியாது என்றும் கூறினர். இப்படியான சூழலில் இன்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் முப்படைகளின் மூத்த அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இப்படியான சூழலில் தான் மத்திய பாதுகாப்புத்துறையிடம் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், “அனைத்து ஊடக சேனல்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பாதுகாப்பு நடவ்டிக்கைகள் குறித்த முக்கிய தகவல்களை வெளியிடுவது செயல்பாட்டு செயல்திறனை பாதிக்கலாம். இது சில விதத்தில் உயிர் ஆபத்தை கூட விளைவிக்கும். கார்கில் போர், 26/11 தாக்குதல்கள் மற்றும் காந்தஹார் விமானக் கடத்தல் போன்ற கடந்த கால சம்பவங்கள் முன்கூட்டியே செய்தி வெளியிடுவதன் அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் (திருத்தம்) விதிகள், 2021 இன் பிரிவு 6(1)(p) இன் படி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிகாரபூர்வ விளக்கங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. நாட்டின் சேவையில் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்தி, செய்தி சேகரிப்பில் விழிப்புணர்வு, உணர்திறன் மற்றும் பொறுப்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என அனைவரும் வலியுறுத்தப்படுகிறார்கள் என பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node