இதை மட்டும் அவுங்க செய்யட்டும் அரசியலில் இருந்து விலகுகிறேன் – பிரசாந்த் கிஷோர் சவால்!

நிதிஷ்குமார் அரசு அளித்த வாக்குறுதிப்படி, 1.5 கோடி பெண்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கினால் நிச்சயமாக அரசியலை விட்டு விலகுவேன் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Prashant Kishor

பீகார் :பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி (JSP) படுதோல்வி அடைந்தது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை; பெரும்பாலான வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். “எக்ஸ்-ஃபாக்டர்” என்று எதிர்பார்க்கப்பட்ட பிரசாந்த் கிஷோருக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் முதல் எதிர்வினையாக, “இந்தத் தோல்விக்கு 100 சதவீதம் நானே பொறுப்பு” என்று தைரியமாக ஏற்றுக்கொண்டார்.

இது குறித்து அவர் பேசுகையில், “பீகார் மக்களிடம் அரசாங்கத்தை மாற்ற முடியவில்லை. அதற்கு நான்தான் காரணம். நாங்கள் கடுமையாக உழைத்தோம், நேர்மையாக உழைத்தோம், ஆனால் எங்கோ தவறிவிட்டோம். மக்களை எங்கள் பக்கம் இழுக்க முடியவில்லை. அதனால் எல்லாப் பழியும் என் மீதே” என்று பிரசாந்த் கிஷோர் ஆழமான ஆதங்கத்துடன் கூறினார்.

மேலும், “நவம்பர் 20-ம் தேதி காந்தி ஆசிரமத்தில் (பிதிஹர்வா) ஒரு நாள் முழுவதும் மௌன விரதம் இருப்பேன்” என்று பிராயச்சித்தமாக அறிவித்தார். பீகார் மக்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.நிதிஷ் குமார் அரசு தேர்தலின்போது பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்குவதாக வாக்குறுதி அளித்தது ஜன் சுராஜுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக பிரசாந்த் கிஷோர் கருதுகிறார். “அந்த ரூ.10,000 இல்லாவிட்டால் நிதிஷ் கட்சி 25 இடங்களுக்கு மேல் வெல்லவே இருக்காது” என்று அவர் குற்றம் சாட்டினார்.

அதனை தொடர்ந்து, மேலும் சவால் விட்டார்: “நிதிஷ் அரசு வாக்குறுதிப்படி 1.5 கோடி பெண்களுக்கு தலா ரூ.2 லட்சம் கொடுத்தால், நான் உடனே அரசியலில் இருந்து விலகிக்கொள்கிறேன்” என்று தைரியமாக அறிவித்தார்.“நாங்கள் சாதி விஷம் கக்கவில்லை, இந்து-முஸ்லிம் பிரிவினை செய்யவில்லை, பணம் கொடுத்து வாக்கு வாங்கவில்லை. எந்தக் குற்றமும் செய்யவில்லை. ஆனால் மக்களுக்கு எங்கள் செய்தியை சரியாகச் சொல்லத் தவறிவிட்டோம்” என்று பிரசாந்த் கிஷோர் தன் தோல்வியை ஆழமாகப் பகிர்ந்து கொண்டார். அதே சமயம், தோல்வி இருந்தாலும் பின்வாங்க மாட்டோம்; தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் வலிமையுடன் வருவோம் என்று உறுதியளித்தார்