திடீரென போன் சத்தம் வந்தாலும் பயப்படாதீர்கள் - NDMA அலர்ட்!

நாடு முழுவதும் நிலநடுக்கம், வெள்ளம், சூறாவளிக்கான மொபைல் அவசர எச்சரிக்கை சோதனை இன்று நடைபெறவுள்ளது.

Hero Image

டெல்லி : நாடு முழுவதும் நிலநடுக்கம், வெள்ளம், சூறாவளி உள்ளிட்ட பேரிடர்களின் போது மக்களுக்கு உடனடி எச்சரிக்கை வழங்கும் செல் பிராட்காஸ்ட் அலர்ட் சிஸ்டம் சோதனை இன்று (மே 2, 2026) நடைபெறுகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) நடத்தும் இந்த சோதனையின்போது, மக்களின் மொபைல் போன்களில் திடீரென அலாரம் ஒலிக்கும், அதிர்வு (வைப்ரேஷன்) ஏற்படும். போன் சைலண்ட் மோடில் இருந்தாலும் அலாரம் மற்றும் அதிர்வு வரும் என்பதால், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று NDMA அறிவித்துள்ளது.

இன்று ஹைதராபாத் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் நோக்கம், உண்மையான பேரிடர் ஏற்படும் சமயத்தில் அவசர எச்சரிக்கைகளை உடனடியாக மக்களுக்கு தெரிவிப்பதற்கான அமைப்பை சோதித்து வலுப்படுத்துவதாகும்.

எச்சரிக்கை வரும் போது என்ன செய்ய வேண்டும்?

இது வெறும் சோதனை மட்டுமே. எந்த பேரிடரும் இல்லை. எனவே அலாரம் வந்தவுடன் பீதி கொள்ளத் தேவையில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று NDMA தெளிவுபடுத்தியுள்ளது.

விலக்கு அளிக்கப்பட்ட பகுதிகள்

தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் எல்லை நாடுகளுடன் எல்லை பகிரும் மாநிலங்கள் இந்த சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.இந்த சோதனை மூலம், அவசரகால தகவல் தொடர்பு அமைப்பின் செயல்திறன் சரிபார்க்கப்படும். மக்கள் அமைதியாக இருந்து, சோதனையை வெற்றிகரமாக முடிக்க ஒத்துழைக்குமாறு NDMA வேண்டுகோள் விடுத்துள்ளது.