கரையைக் கடந்தது மோன்தா புயல்...8 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

MONTHA cyclone alert

ஆந்திரா :வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்படி, புயல் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28, 2025) இரவு 11:30 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே உள்ள நர்சபூர் பகுதியில் கரையைக் கடந்தது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) கணிப்பின்படி, புயல் 90-100 கி.மீ வேகத்தில் காற்றுடன் கரையைத் தொட்டது. இதனால், ஆந்திராவின் கடற்கரை மாவட்டங்களில் கடுமையான காற்று, கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளன.

புயல் கரையைக் கடந்ததும், 1.38 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் மற்றும் 38,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.புயல் கரையைக் கடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகே அதன் வலிமை குறைந்தது. அதிகாலை 2:30 மணியளவில், மோன்தா தீவிரம் குறைந்து புயலாக (Cyclonic Storm) வலுவிழந்த நிலையில், நர்சபூருக்கு மேற்கு-வடமேற்கில் சுமார் 20 கி.மீ தொலைவில் மையம் கொண்டது. IMD தெரிவிப்பின்படி, புயல் கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் புயலாகவே தொடரும். அதன் பிறகு, அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Deep Depression) மாறி மேலும் பலவீனமடையும்.

இந்த மாற்றம், புயலின் தாக்கத்தை குறைக்கும் என்றாலும், மழை மற்றும் காற்றின் தாக்கம் சில நாட்கள் தொடரும். ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிஹார் மற்றும் சிக்கிம் ஆகிய 8 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் ஏனாம் பகுதிகளில், தெற்கு ஒடிசாவில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும், சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை, ஆங்காங்கே அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வடக்கு ஒடிசாவிலும் ஆங்காங்கே கனமழை முதல் மிகக் கனமழை பெய்யலாம். தெலங்கானா மற்றும் சத்தீஸ்கரிலும் அநேக இடங்களில் லேசு முதல் மிதமான மழை, ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்புள்ளது.  இந்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக ஒடிசாவில் ஏற்கனவே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரையோரத்தில் காற்று மணிக்கு 75-85 கி.மீ வேகத்தில், இடையிடையே 95 கி.மீ வரை வீசலாம். இன்று (அக்டோபர் 29) முற்பகல் நேரத்தில் காற்றின் வேகம் 55-65 கி.மீ ஆகக் குறையும். தமிழகம், புதுவை கரையோரங்களில் காற்று 45-55 கி.மீ வேகத்தில், இடையிடையே 65 கி.மீ வரை வீசும், மாலையில் 35-45 கி.மீ ஆகக் குறையும். இதனால், இந்தப் பகுதிகளில் கடல் சீற்றமாக இருக்கும்.

மேலும், தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் ஆந்திரா, தமிழகம், புதுவை கடற்கரைகளில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என IMD அறிவுறுத்தியுள்ளது.முடிவாக, மோன்தா புயலின் கரை கடப்பு, ஆந்திராவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு, 45 NDRF குழுக்கள் ரெடியாக உள்ளன. ரயில்கள், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு உதவி அளிக்கும் என உறுதியளித்துள்ளது.

கரையைக் கடந்தது மோன்தா புயல்...8 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!