சமையல் எரிவாயு கட்டுப்பாடு: சிலிண்டர் வாங்க 25 நாள் இடைவெளி!

ஒன்றிய அரசு சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில் சிலிண்டர்களை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பதை தவிர்க்க நடவடிக்கை

LPG

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒன்றிய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்று வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டரை பெறுவதற்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தியுள்ளது.

இந்த மாற்றத்தின் நோக்கம், சிலிண்டர்களை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பதை தடுப்பதாகும். தற்போது சில இடங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால், சிலர் அதிக அளவில் வாங்கி பதுக்கி விற்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், உள்நாட்டு தேவையை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே “தட்டுப்பாடு இல்லை” என்று கூறிவந்த ஒன்றிய அரசு, தற்போது உற்பத்தி அதிகரிப்புக்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை சீரமைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.தமிழ்நாட்டில் சிலிண்டர்கள் கையிருப்பு மற்றும் தேவை குறித்து உடனடியாக தகவல் அளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று, நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநில அளவில் சிலிண்டர் விநியோகம் மற்றும் கையிருப்பு குறித்து துல்லியமான தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.ஒட்டுமொத்தமாக, ஈரான் மீதான தாக்குதலால் ஹார்முஸ் நீரிணை பாதிக்கப்பட்டதால் எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றன. வீட்டு உபயோக சிலிண்டர்கள் முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.