சொந்த மகளையே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்த சந்திரசேகர ராவ்.!

பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்சி) கே. கவிதா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ChandrashekarRao

தெலுங்கானா :தெலங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து எம்.எல்.சி கவிதா இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அவரை இடைநீக்கம் செய்யும் முடிவை அவரது தந்தையும் கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் எடுத்துள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கைகள் பிஆர்எஸ் கட்சிக்கு தீங்கு விளைவிக்கும் என்று பிஆர்எஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கட்சித் தலைமை இதை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவ், கே.கவிதாவைக் கட்சியில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்.

கட்சியின் முக்கியத் தலைவர்கள் மீதான கவிதாவின் சமீபத்திய கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. நேற்று, ஒரு செய்தியாளர் சந்திப்பில் காலேஸ்வரம் திட்டத்தில் கே.சி.ஆர் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டியதற்குப் பின்னால் கே.சி.ஆரின் மருமகன் ஹரிஷ் ராவ் (முன்னாள் பொருளாதார அமைச்சர்) மற்றும் மற்றொரு மருமகன் சந்தோஷ் குமார் மற்றும் மேகா கிருஷ்ணா ராவ் ஆகியோர் இருப்பதாக கவிதா குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியில் இருந்து மகள் கவிதாவை தற்காலிகமாக நீக்கியுள்ளார் சந்திரசேகர ராவ். தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு, காலேஸ்வரம் தடுப்பணை கட்டுமானம் தொடர்பான நிதி முறைகேடுகள் குறித்த விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

நீதிபதி பி.சி. கோஷ் கமிஷன் அறிக்கையில், இந்தத் திட்டத்தில் பல பிழைகள் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். மூன்று தடுப்பணைகளும் முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. காலேஸ்வரம் திட்டத்தால் சுமார் ரூ.1 லட்சம் கோடி வீணடிக்கப்பட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.