டெல்லி :அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை நாடு முழுவதும் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க இருப்பதாக பிஎஸ்என்எல் பொது மேலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ரூ.37,000 கோடியில் இந்தியா முழுவதும் 4G சேவை, 222 கிராமங்களில் புதிய டவர்கள், 35 கிராமங்களில் 4G டவர் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு 4G சேவைகள் வழங்கப்படவுள்ளன, USOF உதவியுடன் தமிழ்நாட்டில் 4G சேவை வழங்க 620 கிராமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாளை (செப்டம்பர் 27 ஆம் தேதி) நாடு முழுவதும் கிட்டத்தட்ட 98,000 தளங்களில் BSNL இன் 4G சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும், பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் BSNL பொது மேலாளர் பார்த்திபன் கூறியுள்ளார்.
BSNL இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட 4G தளங்களை நிறுவியுள்ளது, இதில் 41,000-க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன. BSNL, TCS மற்றும் C-DOT தலைமையிலான கூட்டமைப்புடன் இணைந்து உள்நாட்டு 4G தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சேவையை வழங்குகிறது.
இது 700 MHz மற்றும் 2100 MHz அலைவரிசைகளில் இயங்குகிறது, இது நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் சிறந்த கவரேஜை உறுதி செய்கிறது. BSNL இன் 4G சேவைகள், Jio, Airtel மற்றும் Vi போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்கு மலிவு விலை திட்டங்களை வழங்குகின்றன. மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 5G சேவைகளை அறிமுகப்படுத்த BSNL திட்டமிட்டுள்ளது.
