மேற்கு வங்கம் : சட்டமன்றத் தேர்தல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து, தேர்தல் நிலவரம் குறித்து விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறினார், 2026 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரலாற்றிலேயே அதிக உற்சாகத்துடன் நடைபெற்றுள்ளது. 16 மாவட்டங்களில் உள்ள 52 தொகுதிகளில் சுமார் 92.98% என்ற மிக உயர்ந்த வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இது சாதாரண எண்ணிக்கையல்ல; மக்கள் மாற்றத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதற்கான வெளிப்படையான சான்று என அவர் விளக்கினார்.
நேற்று காலை முதலே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாக்களித்தனர். அனைத்து தரப்பினரும் பெருமளவில் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள். பல இடங்களில் பெண்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. சில கிராமப்புறங்களில் 90% மேல் வாக்குப்பதிவு நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அளவிலான வாக்குப்பதிவு, ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என அவர் கூறினார்.
மேலும், "மக்கள் ஏற்கனவே தங்களது முடிவை எடுத்துவிட்டார்கள். 'தீதி வெளியேறப் போகிறார், பாஜக ஆட்சிக்கு வரப் போகிறது' என்பது இப்போது நிலைமையை சரியாக பிரதிபலிக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக மதிப்பீட்டின்படி முதல் கட்டத்தில் போட்டியிட்ட இடங்களில் பெரும்பான்மையான வெற்றி கிடைக்கும் என்றும், மொத்தம் 152 இடங்களில் 110க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவோம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் மீது மக்கள் அதிருப்தி அதிகரித்துள்ளதையும், அதனால் தான் இத்தகைய வாக்குப்பதிவு ஏற்பட்டுள்ளதாகவும் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். “பயத்திலிருந்து நம்பிக்கைக்கு மக்கள் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்ற அவர், இந்த மனநிலை அடுத்த கட்ட வாக்குப்பதிவுகளிலும் தொடரும் என்றார்.
மேலும், தேர்தல் அமைதியாக நடைபெற, இந்திய மத்திய தேர்தல் ஆணையம் மற்றும் மேற்கு வங்க போலீசாரை அவர் பாராட்டினார். "நீண்ட காலத்திற்கு பிறகு எந்த உயிரிழப்பும் இல்லாமல் தேர்தல் நடைபெற்றுள்ளது; இது ஜனநாயகத்திற்கு நல்ல அறிகுறி" என்றும் குறிப்பிட்டார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, ஊழல் ஒழிப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், பெங்காலி மொழி பேசினால் உள்ளூர் தலைவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் அவர் உறுதி அளித்தார்.
மொத்தத்தில், முதல் கட்ட வாக்குப்பதிவு மிக உயர்ந்த அளவில் நடந்துள்ளது, அந்த அரசியல் மாற்றத்திற்கான மக்களின் மனநிலையையும் வெளிப்படுத்துகிறது என பாஜக தரப்பு வலியுறுத்துகிறது. அடுத்த கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
