திருநெல்வேலியில் கொடியன்குளம் குமார் என்ற அதிமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் சரமாரியாக தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கொடியன்குளம் குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் உறவினர் செந்தில்குமார் ஆகியோர் ஒன்றாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் குமாரின் அலுவலகத்தின் மீது திடீரென நாட்டு வெடிகுண்டை வீசியது.
unknown nodeபின்னர், அலுவலகம் உள்ளே புகுந்து மிளகாய்பொடியை தூவி கொடியன்குளம் குமாரை கொலை செய்ய கத்தியால் குத்த முயற்சித்தது. இதில் கொடியன்குளம் குமார் லேசான வெட்டுக் காயங்களுடன் தப்பியோடிவிட்டார். ஆனால், செந்தில்குமார், விஜயலட்சுமியை மர்ம கும்பல் சரமாரியாக கத்தியால் தாக்கியது. இதில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதில் இருவரும் மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தினர் சேர்த்தனர். இதில் பலத்தகாயம் அடைந்த செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர், அதனுடன், தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு தடுப்பு போலீசாரை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே, கொடியன்குளம் குமாருக்கு நிலம் தொடர்பாக ஒரு சிலருடன் தகராறு மற்றும் முன்விரோதம் இருந்துள்ளது, இந்த முன்விரோதத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதா என்றும், வேறு காரணம் ஏதும் உண்டா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால், பாளையங்கோட்டை பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.