நான் துணை முதல்வரா.? நிர்வாகிகளுக்கு 'குட்டு' வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!  

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வர வேண்டும் என திமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியதை குறிப்பிட்டு அவரே இன்று நடைபெற்ற திமுக கூட்டத்தில்

Tamilnadu Minister Udhayanidhi Stalin

சென்னை:அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வர வேண்டும் என திமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியதை குறிப்பிட்டு அவரே இன்று நடைபெற்ற திமுக கூட்டத்தில் விளக்கம் அளித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி தலைமை அலுவலகமான அன்பகத்தில் இன்று (ஜூலை 20) திமுக இளைஞரணி தொடங்கி 44 ஆண்டுகள் முடிந்து 45ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது அமைச்சர் உதயநிதி பேசுகையில், பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். குறிப்பாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் உலாவும் “துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்” எனும் வதந்தி பற்றி குறிப்பிட்டு பேசினார்.

அவர் கூறுகையில், இன்று எனக்கு முன்னர் பேசிய பல நிர்வாகிகள் என்னை முதலமைச்சருக்கு துணையாக (துணை முதல்வர்) வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள் என கூறினார். அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள் கைதட்டி ஆர்ப்பரிக்க தொடங்கினர். உடனடியாக குறுக்கிட்ட அமைச்சர் உதயநிதி , ” நான் இன்னும் பேசி முடிக்கவில்லை ” என கூறி தனது பேச்சை தொடர்ந்தார்.

அவர் கூறுகையில், ” தீர்மானம் நிறைவேற்றிய அனைவரும், பத்திரிகைகளில் உலா வரும் கிசுகிசு வதந்தியை படித்துவிட்டு, ஒருவேளை இதுதான் நடக்க போகிறதோ என நினைத்து இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றி, முன்னரே துண்டு போட்டு வைத்துள்ளீர்கள்.” என அமைச்சர் உதயநிதி கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், ” எப்படி தலைவர் எந்த பொறுப்பில் இருந்தாலும், அவர் மனதிற்கு நெருக்கமான பொறுப்பு என இளைஞரணி செயலாளர் பொறுப்பு என கூறுகிறாரோ, அதே போல தான் எனக்கும் எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் இளைஞரணி செயலாளர் என்ற பதவி எனது நெஞ்சுக்கு நெருக்கமான பதவி.

துணை முதலமைச்சர் பதவி பற்றி பத்திரிகை நண்பர்கள் கேட்கும் போது, நான் பதில் கூறி இருக்கிறேன். நான் மட்டுமல்ல அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம்.  எல்லா அமைப்பாளர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம். எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிட மாட்டேன். இங்கு பணிகள் ஏராளமாக உள்ளன.

2026 தேர்தலில் எத்தனை கூட்டணிகள் வந்தாலும், ஜெயிக்கப்போவது கழகத்தலைவர் தான். மீண்டும் கழக தலைவர் ஆட்சி தான். நமது கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் மீண்டும் தமிழக முதல்வர் என்பது மட்டுமே நமது இலக்கு என திமுக இளைஞரணி நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.