விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' படத்தை திரையிட நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு.!

“கிங்டம்' திரைப்படம் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல, மிகத் தவறாக சித்தரிப்பதாக சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார்.

Kingdom

சென்னை :கிங்டம்’ திரைப்படத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் (NTK) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். திரையரங்கு முன்னர் முற்றுகை போராட்டம் நடத்தியதால், போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தப் படம் தமிழ்நாட்டில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ஈழத்தமிழர்களை இழிவாக சித்தரிக்கும் கிங்டம் திரைப்படத்தினை திரையிடக்கூடாது மீறினால் திரையரங்குகள் முற்றுகையிடப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிக்கை விடுத்ததை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள அக்கட்சியினர் கிங்டம் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.

அதன்படி, மதுரை காளவாசல் பகுதியில் உள்ள சண்முகா திரையரங்கில் ‘கிங்டம்’ படத்தை திரையிடக் கூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரத்தில் ஜெகன் திரையரங்கில் படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டு, திரையிடலை நிறுத்தக் கோரி போராட்டம் நடைபெற்றது.

இதன் காரணமாக, அங்கு காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது, மேலம் போலீசார் திரையரங்கு முன் குவிக்கப்பட்டனர். இது போக, யாழினி திரையரங்கில் படத்தின் திரையிடலை தடுத்து நிறுத்த நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், அம்பத்தூரில் உள்ள திரையரங்கை முற்றுகையிட்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.