சண்டைக் கலைஞர் உயிரிழப்பு: "இனிமேல் இப்படி நடக்கவே கூடாது"- தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை.!

வேட்டுவம் படப்பிடிப்பில் சண்டைக் கலைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tamil Cinema Producers Association

சென்னை :இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ”வேட்டுவம்” படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.நேற்று முன் தினம் (ஜூலை 13) நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் நடைபெற்ற படப்பிடிப்பில், கார் சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் மோகன் ராஜ் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த விபத்து குறித்து வேதனை தெரிவித்து, படப்பிடிப்புத் தளங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ”இயக்குனர்  பா. ரஞ்சித் அவர்களின் வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில், தமிழ் சினிமாவில், சண்டைக்காட்சிகளில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பெற்றிருந்த திரு மோகன் ராஜ் மறைந்து விட்டார் என்ற செய்தி அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சி அளித்தது. பல திட்டமிடுதல்களுடன் நடந்த படப்பிடிப்பில் நடந்த இந்த கோர விபத்து மிகவும் கவலை தருகிறது.

மோகன் ராஜ்  ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். அவரின் குடும்பத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இரங்கலை தெரிவிக்கும் இந்த நேரத்தில். இது போன்ற விபத்துகள் இனி தமிழ் திரைப்பட தயாரிப்புகளில் நடக்காமல் இருக்க. தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், ஸ்டண்ட் மாஸ்டர்-களும், சண்டை கலைஞர்களும் மேலும் சிறப்பான முன்னேற்பாடுகளையும். பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

பார்வையாளர்களை கவர நம் திரைப்படங்களில் உலக தரத்திற்கு ஹாலிவுட் போல சண்டைக்காட்சிகள் இடம்பெற முயற்சிப்பது அவசியம். அதே சமயம், ஹாலிவுட் படப்பிடிப்புகளில் செய்யப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் நம் படப்பிடிப்புகளில் செய்த பின் தான், சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற வேண்டும். இன்னொமொரு கலைஞனின் உயிர் பலியாகாமல் தடுக்க, நாம் அனைவரும் இனிமேல் இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

unknown node