இந்தியாவில் எதிர்பார்ப்பை விட மிகக் குறைவான ஆர்டர்கள்! அதிர்ச்சியில் டெஸ்லா!

இந்தியாவில் ஜூலை மாதம் அறிமுகமான டெஸ்லாவின் Model Y காரின் ஆர்டர்கள், எதிர்பார்ப்பை விட மிகக் குறைவாகவே உள்ளதால் அந்நிறுவனம் அதிர்ச்சியில் உள்ளது.

tesla car india musk

டெல்லி :இந்தியாவில் ஜூலை 15, 2025 அன்று அறிமுகமான டெஸ்லாவின் Model Y மின்சார காருக்கு, எதிர்பார்த்த அளவு ஆர்டர்கள் கிடைக்காததால், நிறுவனம் அதிர்ச்சியில் உள்ளது. செப்டம்பர் 2, 2025 வரை வெறும் 600 ஆர்டர்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது, இது டெஸ்லாவின் உள் மதிப்பீடுகளை விட மிகவும் குறைவாக உள்ளது. இந்த பின்னடைவு, உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையில் டெஸ்லாவின் வளர்ச்சி எதிர்பார்ப்புகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.

இந்தியாவில் உயர் இறக்குமதி வரி காரணமாக Model Y-ன் தொடக்க விலை ரூ.59.89 லட்சமாக ($69,700) நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது அமெரிக்காவில் ($44,490) உள்ள விலையை விட கணிசமாக அதிகம். இதனால், இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் 4% மட்டுமே உள்ள நிச் பிரிவை இலக்காகக் கொண்டு, மும்பை, டெல்லி, புனே, மற்றும் குருகிராமில் மட்டும் டெலிவரிகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, 350 முதல் 500 கார்களை செப்டம்பர் 2025 முதல் ஷாங்காயிலிருந்து இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு, குறிப்பாக சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறை, சாலைகளில் ஒழுங்கின்மை, மற்றும் பிற பிரச்னைகள் ஆர்டர்கள் குறைவதற்கு காரணமாக இருக்கலாம். டெஸ்லா, மும்பையில் முதல் ஷோரூமையும், டெல்லியில் இரண்டாவது ஷோரூமையும் திறந்துள்ளது, மேலும் எட்டு இடங்களில் சூப்பர்சார்ஜர்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

ஆனால், உயர் விலை மற்றும் சந்தை சவால்கள் காரணமாக, இந்தியாவில் டெஸ்லாவின் முதல் முயற்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.உலகளவில் டெஸ்லாவின் விற்பனை 2025 முதல் மூன்று மாதங்களில் 3,84,122 வாகனங்களாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 60,000 குறைவாகும். இதற்கிடையில், சீனாவின் BYD நிறுவனம் 2025 முதல் பாதியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை விற்று முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் டெஸ்லாவின் இந்த மந்தமான தொடக்கம், உலகளாவிய விற்பனை சவால்களை மேலும் வெளிப்படுத்துகிறது, மேலும் இந்திய அரசுடன் குறைந்த இறக்குமதி வரி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.