தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Featured image

சென்னை: செப்டம்பர் 6-ஆம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, (07-09-2024) காலை 08:30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியாக நிலவுகிறது.

மேலும் இது வடக்கு திசையில் நகர்ந்து, 8-ஆம் தேதி வாக்கில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இந்த காற்றழுத்ததாழ்வு மண்டலமானது, அடுத்த 3 தினங்களில் மேற்கு- வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம்-வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைப்போல, 9-ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.