கடந்த சில நாட்களாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்று மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், இன்று தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதன்படி, இன்று தமிழகத்தின் கோயம்புத்தூர், திருநெல்வேலி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை நிலவரம்:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
