சொன்னதை செய்து காட்டிய விஜய்...அமைச்சரவையில் இணைந்த வன்னி அரசு, ஷாஜகான்!

தவெக அரசில் அமைச்சராக பதவியேற்றார் ஐயுஎம்எல் பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகான்

Hero Image

சென்னை : தமிழக அரசியலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கூட்டணி அமைச்சரவை விரிவாக்கம் இன்று முக்கிய திருப்பத்தை எட்டியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில், திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிகாரப்பூர்வமாக அமைச்சரவையில் இணைந்துள்ளன.

அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ வன்னி அரசு அமைச்சராக இன்று பதவியேற்றார். அதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ ஷாஜகானும் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இருவருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் கூறப்பட்டிருந்தது. தற்போது விசிக மற்றும் ஐயூஎம்எல் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால், “விஜய் சொன்னதை செய்து காட்டியுள்ளார்” என்று கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவன் தலைமையிலான கட்சி நீண்ட காலமாக சமூக நீதி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது கட்சிக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷாஜகான் அமைச்சராக பதவியேற்றிருப்பது, சிறுபான்மை சமூகங்களுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது என்ற அரசியல் செய்தியை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.