மீண்டும் ‘வந்தே மாதரம்’ முதலிடம்... 3வது இடத்துக்கு தமிழ்த்தாய் வாழ்த்து!

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.

Hero Image

சென்னை : தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியிலேயே “வந்தே மாதரம்” முதலில் இசைக்கப்பட்டு, பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்க விழாவிலும் அதே நடைமுறை பின்பற்றப்பட்டதாக கூறப்படுவது மீண்டும் அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்க விழாவில், புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் முதலில் “வந்தே மாதரம்” இசைக்கப்பட்டதாகவும், அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால், “தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லையா?” என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

ஏற்கனவே, முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழாவின் போதும் இதேபோன்ற சர்ச்சை எழுந்தது. அப்போது, “தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்பட வேண்டும்” என்று பல தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

அந்த சர்ச்சைக்கு பிறகு விளக்கம் அளித்திருந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தாய்த் தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்படுவதில் தமிழக வெற்றிக் கழக தலைமையிலான அரசுக்கு உடன்பாடு இல்லை” என்று கூறியிருந்தார்.

மேலும், “இதுகுறித்து ஆளுநரிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் நடைமுறைகளின்படி செயல்பட வேண்டிய கட்டாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இனி வரும் காலங்களில் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இடம்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார்.

ஆனால், இன்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்க விழாவிலும் மீண்டும் “வந்தே மாதரம்” முதலில் இசைக்கப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து பின்னர் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியானதால், சமூக வலைதளங்களில் புதிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.

“தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்கப்படும் என்று அரசு கூறியிருந்த நிலையில், ஏன் மீண்டும் அதே நடைமுறை தொடர்கிறது?” என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, தமிழ் ஆதரவு அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் விளக்கம் கோரி வருகின்றன.

மீண்டும் ‘வந்தே மாதரம்’ முதலிடம்... 3வது இடத்துக்கு தமிழ்த்தாய் வாழ்த்து!