இந்துக்களை ஏளனம் செய்வது தான் திமுகவிற்கு வேலை – எல்.முருகன்
இந்துக்களை ஏளனம் செய்வது தான் திமுகவிற்கு வேலை.
தமிழகத்தில் இன்று வேல் யாத்திரையை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது. இந்த தடையை மீறி இன்று பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறுகிறது. கையில் வேலுடன் திருத்தணியை சென்றடைந்த எல்.முருகன் அங்கு இந்த யாத்திரையை காண கூடியுள்ள, மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.
அவர் பேசுகையில், திருத்தணி முருக பெருமானின் இடம். முருகனின் மனதிற்கு பிடித்த இடம் இது. நாம் அனைவரும் மற்ற மதத்தினரை மதிப்பவர்கள் தான். ஆனால், நம்மை கண்டபடி பேசும் போது, நம்மால் சும்மா இருக்க முடியாது. ஆரம்பகால முதற்கொண்டே, திமுகவிற்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தமிழ் கடவுளை ஏளனமாக பேசுவது தான் வேலை.
இந்து மக்களின் மத உணர்வை கேலி செய்வது, ஏளனம் செய்வதும் தான் திமுகவின் வேலை. நம்முடைய தெய்வத்தை வழிபடுவது நமது உரிமை. இதனை தடுப்பதற்கு திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் எந்த உரிமையும் கிடையாது என திமுகவை சாடியுள்ளார்.