போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் சதம் அடிப்பார்...அபிஷேக் குறித்து மோர்னே மோர்கல்!

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அபிஷேக் சர்மா சதம் அடித்தார் அதே போலவே இப்போதும் சதம் அடிப்பார் என மோர்கல் தெரிவித்துள்ளார்.

abhishek sharma

மும்பை :T20 உலகக் கோப்பை 2026-இன் அரை இறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மார்ச் 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோத உள்ளன. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் இடம் குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெளிவான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அபிஷேக் சர்மா இந்த டூர்னமென்ட்டில் இதுவரை ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். இதனால் அவரது இடம் கேள்விக்குள்ளாகியுள்ளது.

ஆனால் மோர்னே மோர்கல் இதை மறுத்து, அபிஷேக் சர்மாவுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என்று உறுதியாகக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அபிஷேக் சதம் அடித்ததை நினைவுகூர்ந்த மோர்கல், “நாளை மீண்டும் அதே எதிரணிக்கு எதிராக வாய்ப்பு உள்ளது” என்று குறிப்பிட்டார். மோர்கல் தனது பேச்சில், “சில சமயங்களில் ஆட்டம் கடினமாக இருக்கும். சஞ்சு சாம்சனுக்கும் சமீபத்தில் இதே நிலைதான் இருந்தது.

ஆனால் அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முக்கியமான போட்டியில் சதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அபிஷேக் ஆட்டத்தின் தொடக்கத்தில் 1-2 பெரிய ஷாட்கள் அடித்தால் அவருக்கு நம்பிக்கையும் ரிதமும் கிடைக்கும். இது அவருக்கு புதிய பக்கம். நாளை அவர் நன்றாக ஆடுவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 254/6 என்ற உயர் ஸ்கோர் எட்டியது. இந்நிலையில், நாளை நடைபெறும் அரை இறுதியும் பேட்டிங் நட்பு மைதானமாக இருக்கும் என்று மோர்கல் கணித்துள்ளார். “மதிய நேரத்தில் பிட்ச் பற்றி முழுமையாக தெரியாது, ஆனால் மாலை நேரத்தில் உயர் ஸ்கோர் ஆட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அணி முழு வீச்சுடன் ஆடும்” என்று அவர் கூறினார்.

இந்திய அணி தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அபிஷேக் சர்மாவின் தற்போதைய ஃபார்ம் குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் மோர்கலின் இந்த ஆதரவு அணிக்கு மன உறுதியை அளித்துள்ளது. நாளை அபிஷேக் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இங்கிலாந்து அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த அரை இறுதியின் வெற்றியாளர் மார்ச் 8-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அல்லது நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும். இந்தியா ஆறாவது தொடர்ச்சியான அரை இறுதியில் விளையாடுகிறது. மோர்கலின் இந்த நம்பிக்கை அபிஷேக் சர்மாவுக்கு பெரும் உந்துதலாக அமையும் என்பது உறுதி.