அப்பா பேசியது சரியில்லை - கபில் தேவ், தோனியிடம் மன்னிப்பு கேட்ட யுவ்ராஜ் சிங்!

யுவ்ராஜ் சிங், தந்தை யோக்ராஜ் சிங்கின் பேச்சுக்கு எம்.எஸ். தோனி மற்றும் கபில் தேவிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

Hero Image

டெல்லி : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங், தனது தந்தை யோக்ராஜ் சிங் அவ்வப்போது எழுப்பும் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். குறிப்பாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் எம்.எஸ். தோனி மற்றும் கபில் தேவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.தனது வரவிருக்கும் பாட்காஸ்ட்டின் டீசரில் யுவ்ராஜ் பேசுகையில், “கபில் தேவ் மற்றும் எம்.எஸ். தோனியிடம் மன்னிப்பு கோருகிறேன். எனது தந்தையின் கருத்துகளை நான் ஆதரிக்கவில்லை” என்று தெளிவாகக் கூறினார்.

யோக்ராஜ் சிங் பல ஆண்டுகளாக எம்.எஸ். தோனியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். யுவ்ராஜை இந்திய அணியில் இருந்து ஒதுக்கி வைத்ததாக தோனியை குற்றம் சாட்டி அவர் அடிக்கடி பேசி வருகிறார். இந்தக் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

இதுவரை இந்த விவகாரத்தில் பொதுவெளியில் பெரிதாக பதிலளிக்காமல் இருந்த யுவராஜ், இப்போது முதன்முறையாக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். “நான் எனது தந்தையிடம் இது சரியல்ல என்று ஏற்கனவே தனிப்பட்ட முறையில் கூறியுள்ளேன்” என்றும் யுவ்ராஜ் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு யோக்ராஜ் சிங், கபில் தேவுக்கு எதிராகவும் பெரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்தார். 1980களின் தொடக்கத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை கபில் தேவ் பாதித்ததாகவும், கபில் தன்னை அச்சுறுத்தியதாகவும் யோக்ராஜ் கூறியிருந்தார். ஒரு கட்டத்தில் கபில் தேவின் இல்லத்திற்கு துப்பாக்கியுடன் சென்றதாகக் கூட யோக்ராஜ் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டிருந்தார்.

இந்தச் சம்பவங்கள் கிரிக்கெட் உலகில் பல ஆண்டுகளாக விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், தனது தந்தையின் கருத்துகளை யுவ்ராஜ் ஆதரிக்கவில்லை என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளார். வரவிருக்கும் பாட்காஸ்ட் டீசரில் யுவ்ராஜ், விராட் கோலி, ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, ரிஷப் பண்ட் மற்றும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

அப்பா பேசியது சரியில்லை - கபில் தேவ், தோனியிடம் மன்னிப்பு கேட்ட யுவ்ராஜ் சிங்!