தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தென்னாப்பிரிக்கா 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஏற்கனவே டி-20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஒருநாள் தொடரில் முதல் போட்டி மழை காரணமாக 40 ஒவர்களாகக் குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது. இதில் தென்னாபிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. தொடர் 1-1 என்ற சமநிலையில் இன்று டெல்லியில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இன்று களமிறங்குகின்றன. தவான் இன்றைய போட்டியில் தனது சொந்த ஊரான டெல்லியில் விளையாடுகிறார். மேலும் டெல்லியில் கடந்த 4-5 தினங்களாக மழை பெய்து வருவதால் போட்டி நாளான இன்றும் மழை தொடரலாம் என்று கூறப்படுகிறது.
இதுவரை இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்தியா 36 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 50 போட்டிகளிலும் வென்றுள்ளது. 3 போட்டிகளில் முடிவு தெரியவில்லை. இந்தியாவில் 30 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் இந்தியா 16 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 14 போட்டிகளிலும் வென்றுள்ளன.