ஜடேஜாவை கொடுத்துட்டு ஆல்-ரவுண்டருக்கு எங்க போவீங்க? CSK-வை விளாசிய கிரிஸ் ஸ்ரீகாந்த்!

ஜடேஜாவை விட்டால் ஆல்-ரவுண்டர் தேட வேண்டியிருக்கும் என கிரிஸ் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

Featured image

ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்து, சஞ்சு சாம்சனை பெறும் ரூமர் பரவி வருகிறது. கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது இந்த செய்தி தான் ட்ரெண்டிங் செய்தியாக இருந்து வரும் சூழலில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், இதை வைத்து முன்னாள் இந்திய ஓப்பனர் கிரிஸ் ஸ்ரீகாந்த் கடுமையான கேள்வி எழுப்பியுள்ளார். “ஜடேஜா போனால் சிஎஸ்கேயின் ஆல்-ரவுண்டர் யார்?” என்று கேட்ட ஸ்ரீகாந்த், டி20 போட்டியில் ஆல்-ரவுண்டர் மிக முக்கியம் என்று வலியுறுத்தினார். சாம்சன் சிறப்பான வீரர் என்றாலும், ஜடேஜாவுக்கு ஈடு இல்லை என்று தெரிவித்தார்.தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், “சஞ்சு சாம்சனை தோனிக்கு அடுத்த தலைவராக உருவாக்கலாம் என்று பேசுகிறார்கள். ஆனால் உர்வில் படேல் ஏற்கெனவே விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன். ஜடேஜாவை விட்டால் ஆல்-ரவுண்டர் தேட வேண்டியிருக்கும்.

கேமரூன் கிரீன் போன்றோர் டிரை அண்ட் டெஸ்டட் இல்லை. அவர் பேட்ஸ்மேன், 4 ஓவர்கள் போடலாம். ஆனால் ஜடேஜா பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் மூலம் மேட்ச் வின்னர்” என்று கூறினார்.கடந்த இரு ஆண்டுகளாக ஜடேஜாவுக்கு பேட்டிங் வாய்ப்பு சரியாகக் கிடைக்கவில்லை என்று ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டினார். “2 பந்துகள் மீதமிருக்கும் போது ஜடேஜா வருவார். ரசிகர்கள் அவரை அவுட்டாகி தோனி வர வேண்டும் என்று காத்திருப்பார்கள். இது வருத்தமானது. 2025 சீசனில் ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாக இல்லை. ஆனால் அவர் 6 அல்லது 7-வது இடத்தில் வந்து 10-12 பந்துகள் மட்டுமே ஆடியதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று விளக்கினார்.

சஞ்சு சாம்சனின் 2025 ஐபிஎல் செயல்திறமையும் சிறப்பாக இல்லை என்று ஸ்ரீகாந்த் கூறினார். “ஓப்பனராக வந்து ஸ்டார்ட் கொடுத்தார், ஆனால் பெரிய ஸ்கோர்கள் இல்லை. ஒரு 60+ ஸ்கோர் மட்டுமே. யாரும் ஸ்டார்ட் கொடுக்கலாம், உர்வில் படேலும் கொடுக்கிறார். சாம்சனை குறைத்து சொல்லவில்லை, ஜடேஜாவுடன் ஒப்பிடுகையில் இதுதான் நிலை” என்று தெளிவுபடுத்தினார்.

ஜடேஜா – சாம்சன் டிரேட் ரூமர் உண்மையானால் சிஎஸ்கே அணி ஆல்-ரவுண்டிங் பிரிவில் பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று ஸ்ரீகாந்த் எச்சரித்தார். ஜடேஜாவின் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் திறமை டி20-யில் அணிக்கு இன்றியமையாதது என்று வலியுறுத்தினார்.