மீண்டும் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் விராட் கோலி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

கோலி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராகும் வகையில் மூன்று போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

virat kohli

டெல்லி :இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, விஜய் ஹசாரே டிராபி போட்டியில் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். ஜனவரி 6-ஆம் தேதி ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பார் என்று டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (DDCA) தலைவர் ரோஹன் ஜெய்ட்லி உறுதிப்படுத்தியுள்ளார். பெங்களூருவில் உள்ள BCCI சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (COE) மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.பிசிசிஐ விதிப்படி மத்திய ஒப்பந்த வீரர்கள் குறைந்தது இரு விஜய் ஹசாரே போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் கோலி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராகும் வகையில் மூன்று போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். “தற்போது அவர் விளையாட உள்ளார். விராட் மூன்று போட்டிகளுக்கு தனது கிடைக்கும் தன்மையை உறுதி செய்துள்ளார்” என்று ரோஹன் ஜெய்ட்லி தெரிவித்தார்.கோலி ஏற்கனவே டெல்லி அணிக்காக இரு போட்டிகளில் விளையாடி சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

முதல் போட்டியில் 131 ரன்களும், இரண்டாவது போட்டியில் 77 ரன்களும் அடித்தார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 16,000 ரன்களை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார். 330 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய கோலி, சச்சின் டெண்டுல்கரின் (391 இன்னிங்ஸ்) சாதனையை முறியடித்தார்.நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 11-ஆம் தேதி அதே மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்திய ஒருநாள் அணி ஜனவரி 8-ஆம் தேதி வடோதராவில் முகாம் அமைக்க உள்ளது. கோலி ஒரு நாள் முன்னதாக வந்து பயிற்சி செய்ய வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளனர். பணிச்சுமை மேலாண்மை திட்டத்தின்படி இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கு இவர்கள் முக்கியமானவர்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோலியின் உள்ளூர் போட்டி பங்கேற்பு அவரது ஃபார்மை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.