டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) T20I அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரை நியமிக்கும் முடிவை எடுக்கும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்வுக் குழு மற்றும் BCCI மேலிட அதிகாரிகள், சூர்யகுமாரின் சமீபகால பேட்டிங் பார்மைப் பற்றி அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதேசமயம், ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல்-ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக மிடில் ஆர்டரில் உறுதியான பேட்டராக தன்னை நிலைநாட்டியுள்ளார்.
இந்த மாற்றம் இந்திய அணியின் T20I எதிர்காலத்தை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.சுர்யகுமார் யாதவ் 2025-ல் முழு நேர T20I கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றது. அதைத் தொடர்ந்து 2026 T20 உலகக் கோப்பையையும் இந்திய மண்ணில் வென்று, எம்.எஸ். தோனி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்ற மூன்றாவது கேப்டனாக சூர்யகுமார் இடம்பெற்றார்.
இந்திய அணி அவரது தலைமையில் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆனால் அவரது பேட்டிங் பார்ம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மோசமாக உள்ளது. 2024-ல் 429 ரன்கள் (சராசரி 26.81), 2025-ல் 21 போட்டிகளில் வெறும் 218 ரன்கள் (சராசரி 13.62) மட்டுமே எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் கூட கணிசமாகக் குறைந்துள்ளது.ஷ்ரேயாஸ் ஐயர் T20I அணியில் சமீபகாலமாக இடம் பெறவில்லை என்றாலும், ஐபிஎல் கேப்டனாக சிறப்பான சாதனை படைத்துள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் (2021), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2024) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (2025) ஆகிய மூன்று அணிகளையும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
2024-ல் கொல்கத்தாவை சாம்பியனாக்கிய அனுபவம் அவருக்கு பெரும் பலம். ஐபிஎல் முடிவுக்குப் பிறகு இந்திய அணி அதிகமான வெள்ளைப் பந்து தொடர்களில் பங்கேற்க உள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஹோம் தொடர், இங்கிலாந்துக்கு எதிரான 5 T20I தொடர், அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடனான தொடர்கள் வரும் காலத்தில் உள்ளன. BCCI இந்த மாற்றத்தை படிப்படியாக செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யகுமார் பேட்டிங் பார்ம் கவலைக்குரியதாக இருந்தாலும், அணியின் வெற்றிகள் அவரது குறைபாடுகளை மறைத்துள்ளன என்பது BCCI-யின் கருத்து.இந்த முடிவு எப்போது அறிவிக்கப்படும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இருப்பினும், அடுத்த சில மாதங்களில் இந்திய T20I அணியின் தலைமை மாற்றம் உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
