சென்னையில் சஞ்சு சாம்சன்...பிறந்த நாள் வாழ்த்து சொல்லி ஹிண்ட் கொடுத்த CSK நிர்வாகம்!

சஞ்சு சாம்சனை சிஎஸ்கேவுக்கு கொடுத்து, ஜடேஜா, சாம் கரணை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெறுவதற்கான வர்த்தகம் 48 மணி நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

sanju samson CSK

சென்னை :ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி டிரேட் மூலம் பெறுவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சாம்சனை கொடுத்து, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை ராஜஸ்தான் ராயல்ஸ் பெறுவதற்கான வர்த்தக ஒப்பந்தம் 48 மணி நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. இது உறுதியானால் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் மற்றும் விக்கெட் கீப்பிங் பிரிவு பெரிதும் வலுப்பெறும்.

இப்படியான தகவல் கடந்த ஒரு வாரமாக பரவிக்கொண்டு இருக்கும் சூழலில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இதற்கிடையில், சஞ்சு சாம்சன் இன்று (நவம்பர் 11) தனது 31-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், சிஎஸ்கே அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் “Happy Birthday Sanju Samson” என்று வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளது. இது வெறும் வாழ்த்து மட்டுமல்ல, டிரேட் ரூமருக்கு ஹிண்ட் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

#SanjuToCSK, #HappyBirthdaySanju போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகியுள்ளன.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்சனை விடுவிப்பதற்கு தயாராக உள்ளதாகவும், ஜடேஜா போன்ற ஆல்-ரவுண்டர் மற்றும் சாம் கர்ரன் போன்ற வேகப்பந்து ஆல்-ரவுண்டரை பெற விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிஎஸ்கேயின் பர்ஸ் நிலைமை மற்றும் அணி சமநிலை கருத்தில் கொண்டு இந்த டிரேட் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

ரிட்டென்ஷன் டெட்லைன் நவம்பர் 15 என்பதால், 48 மணி நேரத்தில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு வந்தால், எம்.எஸ். தோனி ஓய்வுக்குப் பிறகு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பிரிவு வலுவடையும். ராஜஸ்தான் அணிக்கு ஜடேஜா மற்றும் கர்ரன் வந்தால் ஸ்பின் மற்றும் பேஸ் ஆல்-ரவுண்டிங் பிரிவு பலமடையும். இந்த டிரேட் உறுதியானால் ஐபிஎல் 2026 சீசனில் இரு அணிகளும் பெரிய மாற்றத்தை சந்திக்கும் எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கவேண்டும்.