ரோஹித் – கோலியை தொடர்ந்து விளையாட வைக்கணும் – இர்ஃபான் பதான் ஸ்பீச்!

அதிகம் விளையாடும் போது தான் அவர்களது ஃபார்ம் நிலைத்திருக்கும் என ரோஹித் மற்றும் விராட் கோலி குறித்து இர்ஃபான் பதான் பேசியுள்ளார்.

virat kohli rohit sharma irfan pathan

டெல்லி :விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தற்போது T20I மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் (ODI) கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதனால் அவர்கள் விளையாடும் ஒவ்வொரு ODI போட்டியும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு நிகழ்வாக மாறியுள்ளது. அவர்களை நேரில் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சமீபத்திய ODI தொடர்கள், 2023 உலகக் கோப்பை காலத்தில் இருந்த அதே உற்சாகத்தை மீண்டும் உருவாக்கின. கடந்த சில ஆண்டுகளாக T20 கிரிக்கெட் அதிக கவனம் பெற்றதால், 50 ஓவர் கிரிக்கெட்டின் மீது ஆர்வம் குறைந்திருந்தது. ஆனால் கோலி – ரோஹித் ஜோடி விளையாடும் போட்டிகள், ODI வடிவத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

இந்த மாற்றம் குறித்து முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் கருத்து தெரிவித்தார். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய அவர், “ரோஹித் மற்றும் கோலி ODI-யில் மட்டும் விளையாடுவதால், இந்த வடிவத்துக்கு மீண்டும் ரசிகர்கள் திரும்பி வருகிறார்கள். இதை சரியாக பயன்படுத்த வேண்டும். மூன்று போட்டிகள் மட்டும் இல்லாமல், ஐந்து போட்டிகள் கொண்ட ODI தொடர்களை நடத்தலாம்” என்று கூறினார்.

மேலும் அவர், “டிரையாங்குலர் அல்லது குவாட்ராங்குலர் தொடர்களையும் மீண்டும் கொண்டு வரலாம். உலகக் கோப்பைக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதுவரை அதிக போட்டிகள் நடத்தி, இந்த இருவரையும் தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும். அதிகம் விளையாடும் போது தான் அவர்களது ஃபார்ம் நிலைத்திருக்கும்” என்று வலியுறுத்தினார்.

தற்போது ICC ODI பேட்டிங் தரவரிசையில் ரோஹித் ஷர்மா முதலிடத்திலும், விராட் கோலி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள் கொண்டுள்ள ஆதிக்கத்தை காட்டுகிறது. கோலி – ரோஹித் ஜோடியின் தேர்வுமிக்க பங்கேற்பு, ODI கிரிக்கெட்டுக்கு புதிய உயிர் கொடுத்து, ரசிகர்களை மீண்டும் மைதானங்களுக்கு இழுத்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.